
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சுற்றுலாப்படை காவலர்களின் சீருடையில் கிருஷ்ணர் படம் பதித்த பேட்ஜ்கள் அணிய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரம் கிருஷ்ணர் அவதரித்த, புனித புண்ணிய தலமாக கருதப்படுகிறது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்நகரம் பெரும் புகழ் பெற்றுள்ளதுது.
மதுராவும், மதுராவை சுற்றியுள்ள கோகுலளீ, பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு “கிருஷ்ண ஜென்ம பூமி”யாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்த பகுதியை புனித்தலமாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அந்த புனித பகுதிக்கு என போலீஸ் படை உருவாக்கப்பட உள்ளது. அந்த போலீஸ் படைக்கு சுற்றுலா போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மதுராவுக்கு வரும் கிருஷ்ண பக்தர்களுக்கும், வெளிநாட்டு பக்தர்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தனிப்படையின் போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையில் கிருஷ்ணர் பேட்ஜ் இடம் பெற்றிருக்க வேண்டும் என உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
.பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்லுறவு மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் போலீசார் சீருடையில் இந்து மத கடவுளின் படம் இடம் பெற செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. . இது மதவாதத்தை தூண்டுவதாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா மதசார்பற்ற நாடு. அப்படி இருக்கையில் போலீசார் சீருடையில் இந்து மத கடவுளை இடம் பெற செய்வது பொருத்தமாக இருக்காது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை பெரும் சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது.