
ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவ மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
குமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியில் மீனவ மக்களை நேரில் சந்தித்த ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விஜயதாரணி, கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மக்களின் கோரிக்கைகளை ராகுல் காந்தியிடம் திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தார்.
மக்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, நான் ஏற்கனவே இங்கு வரவேண்டும் என நினைத்தேன். குஜராத் தேர்தல் காரணமாக வர இயலவில்லை. அதனால்தான் தற்போது தாமதமாக வர நேரிட்டது. ஓகி புயலால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பும் பாதிப்பும் மிகக்கடுமையானது.
தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் மீனவர்களும் விவசாயிகளும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தந்தை, சகோதரர், கணவர் என தங்கள் வீட்டு ஆண்களை இழந்து தவிக்கும் தாய்மார்களின் குறைகளை கேட்டறிந்தேன். மிகவும் சோகமாக இருக்கிறது. எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அனைத்து வகையிலும் காங்கிரஸ் கட்சி உதவி செய்யும்.
காங்கிரஸ் மத்தியிலோ தமிழகத்திலோ ஆட்சியிலில்லை. ஆனால் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். பாராளுமன்றத்திலும் தமிழகத்திலும் மீனவர்களுக்காக குரல் கொடுத்து உங்களுக்கான நீதி கிடைக்க காங்கிரஸ் போராடும். மீனவர்கள் பிரச்னையை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கண்டிப்பாக வலியுறுத்தும்.
மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்தெந்த வகையில் உதவ முடியுமோ அனைத்து வகையிலும் காங்கிரஸ் உதவும் என ராகுல் காந்தி உறுதியளித்தார். ராகுல் காந்தி மக்கள் மத்தியில் பேசியதை திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தார்.