தமிழகத்தில் 5 துணை முதலமைச்சர்கள் !! அதிருப்தியாளர்களை சமாளிக்க எடப்பாடியின் அதிரடி பிளான் !!

By Selvanayagam PFirst Published Jun 11, 2019, 8:43 PM IST
Highlights

ஒற்றைத் தலைமை என்ற கோஷம் அதிமுகவில் எதிரொலித்து வரும் நிலையில் அதிருப்தியாளர்களை சமாளிக்கவும், ஓபிஎஸ்க்கு செக் வைக்கவும் ஆந்திரா பாணியில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க எடப்பாடி பழனிசாமி பிளான் பண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி, அதிமுகவுக்கு  மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடும் போட்டி, ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்எல்ஏக்கள் போர்க்கொடி என அதிமுகவில் கடந்த இரண்டு வாரங்களாக குழப்பம் நீடித்து வருகிறது.

பாஜகவில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று ஓபிஎஸ் முயற்சி செய்து வருகிறார்.


அதே போல் கட்சியைக் கைப்பற்றி எம்எல்ஏக்களை வளைத்துப் போட்டு ஓபிஎஸ்சை டம்மி ஆக்க வேண்டும் என இபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து உதவி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழக அமைச்சர்களும் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவு நிலை எடுத்து இரண்டு பிரிவுகளாக உள்ளனர். கிட்டத்தட்ட அதிமுக உச்சகட்ட குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில்தான் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க எடப்பாடி புது பிளான் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஆந்திரா பாணியில் 5 துணை முதலமைச்சர்களை  நியமிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

ஒரு துணை முதலமைச்சருக்கு 25 எம்எல்ஏக்களை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அதன் மூலம் எம்எல்ஏக்களை கட்சி மாறாமல் தடுக்க முடியும் எனவும்  பழனிசாமி நம்புகிறார்.

மேலும் ஓபிஎஸ்சை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கவும் எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து வரும் நாட்களில் அதிமுகவில் விறுவிறு காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!