விரைவில் விடுதலை ஆகிறார் சசிகலா !! நன்னடத்தை விதிகளின்படி விடுவிக்கலாம் என பெங்களூரு சிறை சிபாரிசு கடிதம் !!

By Selvanayagam PFirst Published Jun 11, 2019, 6:26 PM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நன்னடத்தை விதிகளின்படி முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என பெங்களூரு சிறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியிள்ளமு இதையடுத்து வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது.

கடந்த 1991 – 96 அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகிய 4 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் சசிகலாவும், அவரது உறவினர்களும் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக கூறப்பட்டது. பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

சிறை தண்டனையை எதிர்த்து 4 பேரும் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட்டு, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி தீர்ப்பை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்சநீதிமன்றம்  உறுதிப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு 2½ ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்பும் அவர்கள் 3 மாதம் வரை சிறையில் இருந்தனர். அதன்படி அவர்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலையாகி வெளியே வர வேண்டும். இந்த நிலையில் சிறையில் இருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது.

இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.

இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிறை நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யலாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அரசு உத்தரவிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பே அவர் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அதாவது வருகிற டிசம்பர் மாதத்துக்கு முன்பே அவர் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!