
பத்தாண்டு அதிமுக ஆட்சியில் 780 கூட்டுறவு சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, நகைக்கடன் 48 லட்சத்து 84 ஆயிரத்து 786 பேருக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 653 பேர் தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
ஆனால், 12 லட்சம் பேருக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழகதத்தில் உள்ள 4 ஆயிரத்து 451 கூட்டுறவு சங்கங்களில் 780 சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதோடு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படு்ம். கூட்டுறவு சங்கங்களில் 4 ஆயிரத்து 816 கோடி ரூபாய்க்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் 780 கூட்டுறவு சங்கங்களில் 482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் தான் கூட்டுறவு சங்கங்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார். அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது அதிமுக மீது மேலும் ஒரு முறைகேடு புகார் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.