
’அம்மா வழியில் ஆட்சி’ என்று சொல்லி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பழனிசாமியும் - பன்னீரும் வேறெந்த விஷயத்தில் அம்மாவை பின்பற்றுகிறார்களோ இல்லையோ! போலீஸ் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் அந்த அம்மாவின் ரூட்டை பிடிக்க போட்டோ போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.
புதன்கிழமை முடிந்தால் அதுபாட்டுக்கு வியாழக்கிழமை வருவது போல் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் எந்திரத்தனமாக ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா’ வை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஏன்? எதற்கு? இதனால் விளையும் பயன் என்ன? என்று எந்த கேள்விக்கும் பதிலில்லாமல் சம்பிரதாயத்தனமாக இது நடந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் டிசம்பர் 3-ம் தேதியன்று கோயமுத்தூரில் இந்த விழா நடக்கிறதாம். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொள்கிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காக கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என எட்டு மாவட்டங்களில் இருந்து மொத்தம் நான்காயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்களாம்.
தமிழக கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஏற்பாடாகின்றதாம்.
ஆக்கப்பூர்வமான எந்த விளைவையும் தராத இந்த விழாவில் இரு முதல்வர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு விஷயத்துக்கு மட்டுமே சுளையாக பல லட்சங்கள் காலியாகிறது என்று எதிர்கட்சிகள் பொங்குவதை ஆளும் புள்ளிகள் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை!