
இந்தியாவை சிறந்த நாடாக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எந்த அரசியல் விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதிலிருந்து ஒரு நாளும் பின்வாங்க போவதில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில பத்திரிக்கை சார்பில் நடைபெறும் தலைமைப்பண்பு தொடர்பான கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய மோடி, வளர்ச்சியை மையப்படுத்தியே எனது அரசு செயல்படும். அதில் ஊழல் இருக்காது. குடிமக்களை மையப்படுத்திய ஆட்சியாக இருக்கும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கறுப்புப் பணம் சார்ந்த பொருளாதாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கை உயரவும், நாட்டின் அமைப்பை மாற்றவும், அரசு மேற்கொண்ட ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்காக அரசியல் ரீதியாக விலையை கொடுக்க தயாராக உள்ளேன். ஆனால் அந்த நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
பினாமி சொத்துகளைக் கண்காணிக்கவும், திருட்டுகளைச் சோதனை செய்யவும் ஆதார் மாபெரும் பங்கு வகிக்கிறது.
ஜன்தன், தூய்மை இந்தியா, காஸ் சிலிண்டர் மானியம் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களால் ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.