
ஒகி புயலால் பாதிக்கப்படும் இடங்களை கண்காணிக்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என எச்சரித்துள்ளது.
ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது
இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளை தூரிதமாக மேற்கொள்ள கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்புக்குழு, 2 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் விரைந்துள்ளனர்.
தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கவும் மின் தடை ஏற்பட்டால் உடனே சீரமைக்க முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.