
என்னுடைய அரசு மக்களின் நலனுக்காக செய்த பணிகளுக்காக அரசியல் ரீதியாக என்ன விலை கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகப் பேசினார்.
இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் ‘தலைவர்கள் மாநாடு’ டெல்லியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது-
ஊழல் இல்லா நாட்டை உருவாக்குவது, மக்கள் நலனின் அக்கறையுடைய, வளர்ச்சியை முன்னிறுத்திய நட்புறவான சூழலை இந்தியாவில் உருவாக்குவதே எங்களின் முன்னுரிமையாகும்.
நாங்கள் அதிரடியாக மாற்றங்களை கொண்டுவரும்போது, நடவடிக்கைகளை எடுக்கும்போது, சிலர் தேவையில்லாமல் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், எங்களுடைய அரசு அனைத்து மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும்படியான பணிகளை செய்துவருகிறது.
நாங்கள் 2014ம் ஆண்டு ஆட்சியில் அமரும்போது, முந்தைய அரசால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நம்முடைய நிதிச்சூழல், வங்கி முறை உள்ளிட்ட அனைத்துமே சுக்குநூறாகிவிட்டது. இந்தியா எளிதில் 5 துண்டுகளாக உடையக்கூடிய நிலையில் இருந்தது.
ஆனால், இன்று வௌிநாடுகளில் பெருமையுடன், தலைமை நிமிர்த்தி இந்தியர்கள் செல்கிறார்கள். ‘எங்களுடைய கேமரூன் அரசு’, ‘எங்களுடைய டிரம்ப் அரசு’ என்று மற்ற நாட்டினர் கூறுவதைப் போல், நம்பிக்கையுடன், சர்வதேச அளவில் இந்தியர்கள் நடைபோடுகிறார்கள்.
இந்திய மக்களின் நலனுக்காக எங்களுடைய அரசு செய்த நல்ல பணிகளுக்காக அரசியல் ரீதியாக என்ன விலைகொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
ரூபாய் நோட்டு தடையை நாட்டில் கொண்டு வந்ததன் மூலம், பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டு இருந்த கருப்புபணம் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் கார்டு மூலம் பினாமி சொத்துக்கள் குவிப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.