ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக மாவட்ட செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொல்ல போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக மாவட்ட செயலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொல்ல போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி… கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக தனிப்படை போலீசாரால் தேடப்பட்டவர். யாரும் எதிர்பாராத வகையில் நடுரோட்டில் அவர் காரில் தப்பி செல்ல… சேஸ் செய்து குறுக்கே காரை நிறுத்தி மடக்கி கைது செய்திருக்கிறது தனிப்படை.
கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக அவருக்கும், தனிப்படைக்கும் இடையேயான சேசிங் இன்று கர்நாடகாவில் முடிந்து இருக்கிறது. கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் பிஎம் என்ற சாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரை போலீசார் நடுரோட்டில் வைத்து கைது செய்த போது அங்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் ஏதேனும் கடத்தல்காரர்களை தான் மடக்கி பிடித்து அழைத்து செல்கிறது என்று நினைத்து பேசி உள்ளனர்.
சிலர் அந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுக்க… அந்த வீடியோவும் வைரலாகி இருக்கிறது. வழக்கமான தமது ட்ரேட் மார்க் மஞ்சள் சட்டை, கரை வேட்டி தவிர்த்து ஒரு சாதாரண டீசர்ட், காவி நிற வேட்டி, கையில் ஒரு பையுடன் போலீசில் ராஜேந்திர பாலாஜி சிக்கி இருக்கிறார்.
அவரது கைது நடவடிக்கை பெரியளவில் பேசப்பட்டு வரும் அதே நேரத்தில் இந்த 20 நாட்களும் அவருக்கு உதவியர்கள் யார்? யார்? எங்கே தலைமறைவாக இருந்தார்? என்ன செய்தார்? என்ற விவரங்களை போலீசார் தோண்டி துருவ ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 4 பேர் யார் என்ற விவரத்தை கண்டு பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த விவகாரத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது உதவியாளர் நாகேஷன், விருதுநகர் மாவட்ட தொழில்நுட்ப பிரிவின் பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி கைதை விட அவருக்கு உதவிய பாஜகவினர் கைது நடவடிக்கை தான் பெரியளவு பேசப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு தகவல்கள் கசியவிடப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் உணவு, விடுதி, கார் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனராம். இதில் ராஜேந்திர பாலாஜிக்கு கார் ஓட்டி வந்தது நாகேஷன் என்பவர் பாஜக பிரமுகர் என்பது கூடுதல் தகவல்.
அதே நேரத்தில் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூறிய சில விஷயங்களை அரசியல் பிரமுகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது, ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்று அண்ணாமலை அதிரடியாக பேசி இருந்தார்.
ஆனால் இப்போது அவருக்கு உதவியதாகவும், காரோட்டியதாகவும் பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இதற்கு அண்ணாமலையின் பதில் என்னவாக இருக்கும் என்று கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர்.
இதோடு வேறு ஒரு பார்வையையும் தமிழக அரசியல் பிரமுகர்கள் முன் வைக்கின்றனர். தமிழக அரசியலில், களத்தில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சருக்கு, வேறு ஒரு முக்கிய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உதவி செய்துள்ளனர் என்பதுதான். இது எப்படி சாத்தியம்? என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழக பாஜக தலைமைக்கு தெரியாமல் இருக்குமா? என்ற சந்தேகங்களையும் எழுப்புகின்றனர். நெட்டிசன்களும் அண்ணாமலை இதற்கு என்ன பதில் சொல்வார்? என்று சமூக வலைதளங்களில் கமெண்டுகளை போட்டு தாக்கி வருகின்றனர்.
ராஜேந்திர பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு சமமாக, அவருக்கு உதவிய பாஜக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டு உள்ளதை எளிதாக கடந்து விட முடியாது என்றும் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் அனைத்தும் போலீசார் விசாரணையில் விரைவில் வெளிவந்துவிடும் என்று கூறுகின்றனர் திமுகவினர்…!!