டாஸ்மாக் பார் டெண்டர்... இந்த ஒரு வீடியோவே சாட்சி... பார் உரிமையாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Jan 5, 2022, 7:13 PM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பார்களுக்கு போலீஸ் முன்னிலையில் ஒருவர் மட்டுமே டெண்டரை பாக்ஸில் போடும் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிலவரம் என்னவென்று தெரிய வரும்

பார் டெண்டர்களை முடிவு செய்ய வேண்டியது அரசா..? அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் என பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

கடந்த 1996 ஆம் ஆண்டு, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் அவரால் பிரபலமாக முடியவில்லை. எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில், சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரியின் கதை போல, திராவிட முன்னேற்றக் கழகத்தை தலை முழுகி விட்டு, போயஸ் கார்டன் பக்கம் கவனத்தைத் திருப்பினார் செந்தில் பாலாஜி.

2000 ஆம் ஆண்டில்  ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிறகுதான், அவரின் 'அரசியலில் சுக்கிர திசை சுழன்று அடிக்கத் துவங்கியது. வி.செந்தில்குமார் என்ற தனது பெயரை வி.செந்தில்பாலாஜி என்று நெமராலஜிப்படி மாற்றிக் கொண்டார். குமாரை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, பாலாஜி என்ற பெயரைச் சேர்த்த பிறகுதான் பணக்காரக் கடவுள் பாலாஜியின் அருள் பார்வை கடைக்கண் பார்வை இவர் மேல் பட்டது. 

அதிமுகவின்  மாணவர் அணிச் செயலாளராக இருந்த கலைராஜன் அறிமுகம் மூலம் போயஸ்கார்டனில் முன் வரிசையில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து ஆறே மாதங்களில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆனார். அதனையும் தொடர்ந்து கடந்த  2004ஆம்  ஆண்டு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பிற்கு உயர்த்தப்பட்டார்.

 

பிறகு  2006 ஆம் ஆண்டில்  எம்.எல்.ஏ சீட். 2007ஆம் ஆண்டு  மார்ச் 11 ஆம் தேதி  கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், அடுத்த 10 ஆவது நாளில் கரூர் மாவட்டச் செயலாளர் என்று மடமடவென்று மாபெரும் வளர்ச்சி அடைந்து அண்ணா திமுகவின் முன்னணி தலைவர்களின் வயிற்றில் புளியை கரைத்தார்.
2006 ஆம் ஆண்டு இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு போரட்டங்களை  நடத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து அரசியலில் புகழ்பெற்றவை போல், கரூர் பகுதிகளில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக, ஜே.சி.பி முன்பு படுத்து செந்தில் பாலாஜி, இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றார்.இது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது அவருக்கு திமுகவின் பலமான கரூர் கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக செந்தில் பாலாஜி தூக்கிய போர்க்கொடி,  போயஸ் கார்டனின் கடைக்கண் பார்வை பட்டதால் கரூர் மாவட்டச் செயலாளர் பதவி பரிசாகக் கிடைத்தது. 

அத்தோடு ஜெயலலிதாவின் தோழி இன்றைய சின்னம்மா சசிகலாவின் உறவினர்களுடன் கைகோர்த்துக் கொண்ட பிறகு, கார்டனில்  செந்தில் பாலஜியின் செல்வாக்கு புயல் வேகத்தில் எகிறத் தொடங்கியது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற  தேர்தலில், கரூர் தொகுதியிலிருந்து  செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். சசிகலாவின் அண்ணி, இளவரசியின் சம்பந்தி கலியப்பெருமாள் உள்ளிட்டோர்களின் ஆதரவோடு 2011- ஆண்டில் தலையில் சிவப்பு விளக்கு வைத்த காரில் அமைச்சராக வலம் வர  தொடங்கினார் செந்தில்பாலாஜி. 

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 15 க்கும் மேற்பட்ட முறைகள் அமைச்சரவை அசைக்கப்பட்டிருக்கிறது. அதில் சீனியர் அமைச்சர்கள் உட்பட பலரின் அமைச்சர் பதவிகள் ஆட்டம் கண்டிருக்கின்றன. ஆனால் செந்தில் பாலாஜியையோ, அவரது போக்குவரத்துத் துறையையோ அசைக்க முடியவில்லை. அப்படியாக உச்சாணிக் கொம்பில் இருந்த அவரின் பதவிகள் ஒரு முறை அசைக்கப்பட்டு கட்சியின் சாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டார். அதில் பல திடுக்கிடும் பின்னணி சம்பவங்களால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்று அன்றைய அரசியல் செய்தி பத்திரிக்கைகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பரபரப்பு கட்டுரைகள் எழுதி வந்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்த சரித்திர நிகழ்வு.

இந்திய அளவில் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வு,  அதிமுகவில் பூகம்பத்தை உண்டாக்கியது. அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை எழுந்தபோது அதில் செந்தில் பாலஜியின் பெயரும் அடிபட்டது. ஆனால் அதிலெல்லாம் அவர் கவனம் செலுத்தாமல் ஜெயலலிதா விடுதலை பெறவேண்டியும்,  மீண்டும் முதல்வராக வேண்டும் என்று திராவிடக் கொள்கையை துறந்த செந்தில் பாலாஜி புதிய அவதாரமாக பக்தி வேஷம் பூண்டார்.  கோவில் கோவிலாக மாபெரும் விளம்பரத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தார். அதிலும் உச்சகட்டமாக அம்மன் கோவில் ஒன்றில் தீச்சட்டி, காவடி என எடுத்த கையோடு அங்கப்பிரதட்சனம் செய்து கார்டன் தேவதையின் கவனத்தை ஈர்த்தார்.

ஜெயலலிதா விடுதலையான உடன் 5000 பேருடன் சென்று மொட்டையும் போட்டார். அது போதாதென்று, கரூர்  கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்,  அலங்காரவள்ளி சௌந்திரநாயகி அம்பாள்  சன்னதியில் லலிதா திருட்சதை ஹோமம் மற்றும் லட்சத்து எட்டு தீபம் ஏற்றி  சிறப்பு வழிபாடு செய்து அதிமுக முன்னோடிகளில் மூக்கில் விரலை வைக்கச் செய்தார். கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்து அதிமுகவிற்கு புத்துயிர் அளித்தது. இதனையடுத்து மீண்டும் தமிழக முதல்வரானார் ஜெயலலிதா. ஏற்கெனவே கார்டனில் முன் வரிசையில் இடம் பிடித்திருந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் கட்சியில் முக்கிய இடம் அளிக்கப்படும் என்றும்,  அவர் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நில அபகரிப்பு புகார் உள்ளிட்டவை எல்லாம் புஸ்வாணம் ஆகும் என்று கணிப்புகள்  வெளிவந்தன. 

ஆனால் அப்போதைய நிலைமையே வேறாக இருந்தது. செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடையவே செந்தில்பாலாஜி, சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் தீவிரமாக ஆதரிக்க தொடங்கினார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதனால் தனக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தார்.

கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் முதன்மை தளகர்த்தாவும் ஆன செந்தில் பாலாஜி. 
தமிழக அரசியலில் அன்று நடந்த குளறுபடிகளை தெளிவாக கவனித்து வந்த செந்தில் பாலாஜி அடுத்து வருவது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை சரியாக ஆருடம் கணித்து தனது தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தாவ முடிவு செய்தபோது, அது அன்று ஒட்டுமொத்த தமிழக ஊடகங்களுக்கு பரபரப்பு தலைப்பு செய்தியாக இருந்தது. 

திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 14 டிசம்பர் 2018 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். கட்சியில் சேர்ந்தவுடன் இவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் 23 மே 2019 அன்று எம்.எல்.ஏ.வாக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக கரூர் சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக  அமைச்சரவையில்   மின்சாரம்,  கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது "பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்" என்று கோஷமிட்டனர். மேலும் "முதலமைச்சரை நம்பி வாக்களித்தோம், எங்கள் வயிற்றில் இப்படியா அடிப்பது?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ‘’டெண்டர் வெறும் கண் துடைப்பாகவே நடந்து வருகிறது. அதாவது பாதியளவு பார்களுக்கு மட்டுமே டெண்டர் நடப்பதாக சொல்கிறார்கள். வெளியாட்கள் டெண்டர் போட வந்தால் காவல்துறை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. 
முக்கியப் புள்ளிகள் மூன்று பேர் தான் தமிழகம் முழுவதும் உள்ள பார்களை ஏலம் விடும் பொறுப்பை எடுத்துள்ளார்கள். இவர்கள் ஏற்பாடு செய்த நபர்களுக்கு மட்டுமே நேரில் விண்ணப்பங்கள் தரப்படுகிறது.

இவர்களே ஆட்களை வைத்து ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் போட்டுள்ளனர். சரியான முறையில் டெண்டர் விட்டால் அரசுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும். மேற்குறிப்பிட்ட முறைகேடான வழியில் டெண்டர் விடப்பட்டால் பாதி வருவாய் கூட அரசுக்கு கிடைக்காது. அதுபோக இளவரசியுடன் நெருக்கமாக உள்ளதால், மிடாஸ் தயாரிப்புகளை மட்டுமே அதிகம் விற்பனை செய்யச்சொல்லி டாஸ்மாக் பணியாளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தை முற்றுகையிட்ட நிலையில்,முறையாக நடக்கவில்லை என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த பார்களுக்கும் ஒரே நபர் டெண்டர்களை பெட்டியில் போடும் காணொளி pic.twitter.com/iuxjO1l1p3

— AIADMK FAST NEWS (@Karuppusaravan3)

 

டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனையாவதைப் பொறுத்து மாதம் ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொடுத்தால் இரவு 1 மணி வரை திருட்டுத்தனமாக மதுவகைகளை விற்பனை செய்யலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு என்கிறார்கள் மேலிடத்தில் இருந்து. திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பார்களுக்கு போலீஸ் முன்னிலையில் ஒருவர் மட்டுமே டெண்டரை பாக்ஸில் போடும் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிலவரம் என்னவென்று தெரிய வரும்’’ என்கிறார்கள். 
 

click me!