
எஃகு கோட்டையாக உள்ள தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நுழைய நினைக்கிறது, அது ஒரு போதும் நடக்காது என சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எச்சரித்துள்ளார். மேலும் சமீபகாலமாக கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு இந்துத்துவா சக்திகள் இடையூறு செய்து வருவதாக ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியேனும் கால் பதித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கொங்கு மண்டலத்தை குறிவைத்து பாஜக தனது அரசியல் உத்திகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாகா கூட்டங்களை நடத்தி ஆதரவாளர்களைத் திரட்டிப் அவர்களுக்கு வால், ஈட்டி என ஆயுத பயிற்சி வழங்கி வருகிறது. இந்நிலையில் கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாகா பயிற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வி நிலையங்களை மதவெறி கூடாரங்களாக மாற்றும் இந்த முயற்சியை தமிழக அரசு ஒடுக்க வேண்டும், சாகா பயிற்சி ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஒன்று, ஆனால் இப்போது கல்வி நிலையங்களில் அது வெளிப்படையாக நடத்தப்பட்டு வருகிறது.
எனவே காவல் துறையிடம் அதை தடுக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆய்வு நடத்த போலீசார் உள்ளே சென்றபோது, அங்கு இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆர்எஸ்எஸ் மேற்கு மண்டலத்தை குறிவைத்து செயல்பட்டு வருகிறது, தமிழிகத்தில் பெரிய கலவரத்தை தூண்ட முயற்சி செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அந்த அமைப்பை எச்சரித்து பேசியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுபான்மையினர் ஆணையரகத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு மனிதநேய நாள் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சமீபகாலமாக கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இந்துத்துவ சக்திகள் வழிபாட்டு தலங்களுக்குள் புகுந்து சிறுபான்மையின கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய துன்புறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர். எப்படியாவது கலவரத்தை தூண்டி விட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இது தமிழகம், நல்லிணக்கத்துடன், சமய நல்லிணக்கத்துடன் மத பேதமற்று அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழக்கூடிய மாநிலம். இந்த இடத்தில் அவர்களின் முயற்சிகள் எடுபடாது. எஃக்கு கோட்டையாக இருக்கிற தமிழகத்தின் மேற்கு மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நுழைய நினைக்கிறது. அது ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது, இது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.