2ஜி முறைகேடு வழக்கில் ஜெயில் உறுதி..! அடித்து சொல்றாரு சு.சாமி..!

First Published Dec 5, 2017, 11:41 AM IST
Highlights
2g case judgement will favor of country interest


2ஜி முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க இருக்கும் டிசம்பர் 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தாக்கல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து 6 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து தீர்ப்பை தயாரிக்கும் பணி நடைபெற்றது. 

தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து தீர ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதால், இந்த வழக்கை விசாரித்துவரும் ஒ.பி.ஷைனி ஓய்வின்றி தீர்ப்பு எழுதும் பணியில் தீவிரமாக பணியாற்றுவருவதாக தகவல்கள் வந்தன.

சுமார் 6 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுவந்த நிலையில், வரும் 21-ம் தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஷைனி இன்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டுக்கு ஆதரவாகத்தான் கண்டிப்பாக தீர்ப்பு வரும். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள். முக்கியமான வழக்கு என்பதால்தான் இத்தனை ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவருகிறது. கண்டிப்பாக நல்ல தீர்ப்பாகத்தான் வரும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
 

click me!