2016 ராதாபுரம் தேர்தல் முடிவு.. வழக்கை வாபஸ் வாங்க எதிர்பார்க்கும் அதிமுக இன்பத்துரை.. அப்பாவு முடிவு என்ன?

By Asianet TamilFirst Published Jul 29, 2022, 8:18 AM IST
Highlights

2016இல் நடைபெற்ற ராதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த அப்பாவு வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக அவரிடம் கேட்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில் இன்பத்துரை உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 50 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், “தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு நடந்ததாக” குற்றம் சாட்டிய அப்பாவு, தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம, கடந்த 2019 ஆம் ஆண்டில் தபால் ஓட்டுகள், 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. 

இதையும் படிங்க: மோடி படத்தை ஒட்டிய பாஜகவினரை ஏன் கைது செய்யவில்லை.? பாஜகவினரை குளிர வைக்கிறீங்களா.? கே.எஸ். அழகிரி ஆவேசம்!

இதன்படி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதன் முடிவு சென்னை உயர் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்த்து இன்பத்துரை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எண்ணப்பட்ட வாக்கு விவரங்களை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே 2021 சட்டப்பேரவைத் தேர்தலும் முடிந்து ராதாபுரம் தொகுதியிலிருந்து அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது சபாநாயகராவும் இருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் செலவு தமிழக அரசின் நிதியா.? அப்போ தடுப்பூசி யாருடைய செலவு.? திமுகவினருக்கு பாஜக கேள்வி!

அப்போது இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கு தொடர்பான சட்டப்பேரவை காலம் முடிந்துவிட்டது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கை அப்பாவு திரும்பப் பெற்றால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என வாதிட்டார். இந்த வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக எதிர்மனுதாரர் அப்பாவுவிடம் ஆலோசனை பெற்று தெரிவிக்குமாறு அவருடைய வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியது.  பிறகு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பேச்சிலும் செயலிலும் முதல்வராக நடந்துகொண்டார்.. முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டித் தள்ளிய அண்ணாமலை..!

click me!