உணவு, பால் உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவை காட்டிலும் நாம் முன்னிலையில் உள்ளோம். ஆனால் அரசின் தவறான கொள்கைகளால் நாட்டில் 20 கோடி மக்கள் உணவின்றி இருப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மாநிலத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என தெரிவிக்கிறார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களை ஒரு மாதிரியாகவும் மற்ற எதிர்க்கட்சிகளாலும் மாநிலங்களை ஒரு மாதிரியாகவும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதே போலத்தான் குறைந்த அளவே மக்கள் பேசக்கூடிய சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியும், அதிகம் பேசக்கூடிய தமிழ் மொழி போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு குறைந்த அளவு நீதியும் ஒதுக்கப்படுகிறது.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் எதிர்க்கட்சி மாநிலங்களில் மசோதாக்களை விரைவாக கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இத்தகைய அணுகுமுறை படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர் கோயில் என்ற அளவில் உள்ளது இதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஐநா சபை கணக்கெடுப்பின்படி 142 கோடி மக்கள் தொகை உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை மக்கள் தொகை அதிகரித்து விட்டது என பார்க்காமல் 2 84 கோடி கைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியிலும் பால் உற்பத்திகளும் இந்தியா தண்ணீரைவு பெற்றிருக்கிறது.
அமெரிக்காவைக் காட்டிலும் 50 சதவீதம் உணவு உற்பத்தியிலும், சீனாவைக் காட்டிலும் மூன்று மடங்கு பாலு உற்பத்தியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது. இப்படி எல்லா வளங்களும் இருப்பதால் மக்கள் தொகை பெருக்கத்தால் வறுமை ஏற்படவில்லை. மக்கள் தொகை பெருகுவது ஒன்றும் தவறும் கிடையாது. அரசு செய்கின்ற தவற்றின் காரணமாக 20 கோடி மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் உள்ளனர். அரசு பின்பற்றக்கூடிய தவறான கொள்கைகளே இதற்கு காரணம். அதானி, அம்பானி போன்ற தனிப்பட்ட நபர்கள் நலன் சார்ந்த முடிவு எடுப்பதால் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனை மாற்றிக் கொள்ளவில்லை எனில் இதனை எதிர்த்து போராட்டங்களும், கிளர்ச்சிகளும் தொடர்ந்து நடக்கும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேர்மையோடு பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரி மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறந்த சேவையாற்றி உள்ளார். அதில் பாதிக்கப்பட்ட சமூக விரோதிகள் அலுவலகத்துக்குள் புகுந்து பட்டப்பகலில் படுகொலை செய்துள்ளனர். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த குற்றச்சம்பழத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை அரசு மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அரசு பணியாளர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும். சம்பவம் நிகழ்ந்த உடனேயே தமிழக முதல்வர் உடனடியாக நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. விளையாட்டு மைதானங்களில் மது பானம் பயன்படுத்தலாம் என்கின்ற அறிவிப்பு தனிப்பட்ட முறையில் அது தேவையில்லை என நான் கருதுகிறேன் என்றார்.
மேலும்,தொழிலாளர்களுக்கான எட்டு மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்பட்ட விவகாரத்தில் வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா அரசியல் கட்சி தலைவர் அல்ல. அவர் ஒரு வியாபாரிகள் சங்கத் தலைவர். அதிலும் பல சங்கங்கள் இருக்கின்றன அதில் ஒரு சங்கத்துக்கு மட்டும் இவர் தலைவர் .அவர் இந்த விவகாரத்தில் கருத்து சொல்லும்போது, கூட்டணி கட்சிகள் தோழமைக் கட்சிகள் 12 மணி நேர வேலை என்பதை குருட்டுத்தனமாக எதிர்க்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அந்தத் திட்டத்தை திமுக தலைமையிலான அரசு நிறுத்தி வைத்து விட்டது.
இந்த நிலையில் அவர் இத்தகைய கருத்தை தெரிவித்து இருப்பதால் நாங்கள் எல்லாம் குருடர்கள் அவர் மட்டும் அறிவாளி என்பது போன்று கேட்கத் தோன்றுகிறது. விக்ரம ராஜா தனது உயரம் அறிந்து பேச வேண்டும் என்றார்.