
"கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்" - இது கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் அலைபாயுதே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல். உண்மையில் இங்கு இசையால் வாழ்பவர்களே அதிகம். இளையராஜா இசை இல்லையென்றால் எப்போதோ அழிந்து போயிருப்பேன் என பலர் சொல்வதை கூட கேட்டிருப்போம். இசை நம்முள் செய்யும் மாற்றங்கள் வார்த்தைகளில் கூறிவிட முடியாது. அழுகை, கோபம், தனிமை எல்லா உணர்வுகளுக்கும் இசை வடிகாலாக இருக்கும். அப்படிப்பட்ட இசையை கொண்டாடும் 'உலக இசை தினம்' இன்று.
இந்த நாளில் அன்றாட வாழ்வில் இசையின் பங்கையும், உலகம் முழுக்க உள்ள மக்களை ஒன்றிணைக்கும் அதனுடைய ஆற்றலையும் நினைவுகூறுகிறோம். உலக இசை தினம், 1982ஆம் ஆண்டு பிரான்சில் உருவானது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
இசை - நம் அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத முக்கிய பகுதியாகும். மன அழுத்தத்தை குறைக்க, உற்சாகம் பெற, உணர்ச்சியை வெளிப்படுத்த, கொண்டாட்ட மனநிலைக்கு என எல்லாவற்றுக்கும் 'இசை' முக்கிய கருவியாக செயல்படுகிறது.
உலக இசை தினம் வரலாறு:
உலக இசை தினம் 1982 ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டின் கலாச்சார அமைச்சர் ஜாக் லாங் என்பவரால் இசை நாள் அல்லது ஃபேட் டி லா மியூசிக் (இசை விழா) என்ற பெயரால் கொண்டுவரப்பட்டது. இது ஒருபுறமிருக்க, 1976 ஆம் ஆண்டே ஜோயல் கோஹன் 'உலக இசை தினம்' கோடைகால தொடக்கத்தை இரவு முழுவதும் கொண்டாடும் விதமாக 'இசை விழா' என்ற யோசனையை முன்மொழிந்தார். ஆனால் முதல் உலக இசை தின கொண்டாட்டம் 1982ஆம் ஆண்டு பாரிஸில் தான் நடந்தது. அங்கு 1,000 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். அன்று முதல் இசைக்கலைஞர்கள் தெருக்களிலும், பூங்காக்களிலும், கச்சேரி அரங்குகளிலும் இசையின் மீதான தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
முக்கியத்துவம்:
'உலக இசை தினம்' சாதாரண நாள் அல்ல. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இசை வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. அதற்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. அமெச்சூர் மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்கள் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு இந்த நாள் ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இசைக்கலைஞர்கள் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை நினைத்து பார்க்கவும் இந்நாள் அவசியம். இசை ஒரு மனிதனை பண்பட்டவனாக மாற்றும் வல்லமை கொண்டது. மனநல சிகிச்சையில் கூட இசைக்கு அளப்பரிய பங்குள்ளது. மனம் மகிழ!! எப்போதும் இசையை கொண்டாடுவோம்!
இதையும் படிங்க: சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை நீங்க பாலோ பண்ணினால் வாழ்வில் பணக்கஷ்டமே வராதாம் தெரியுமா?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.