Street Dogs: தெரு நாய்கள் யாரை அதிகமாக தாக்கும் தெரியுமா? தெரு நாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?

Published : Aug 14, 2025, 10:59 AM IST
stray dog

சுருக்கம்

தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தெரு நாய்கள் குறித்த வழக்குகளை விசாரித்து சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை

டெல்லியில் தெரு நாய் கடித்து ரேபிஸ் பாதிக்கப்பட்டு மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான பிரச்சனை பூதாகரமானது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுக்கும்படி சென்னையில் மட்டும் 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இதில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன. நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் நாய்களிடம் நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து கோவையைச் சேர்ந்த நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி விளக்கங்களை அளித்துள்ளார்.

நாய்கள் ஏன் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன?

அவர் கூறியிருப்பதாவது, “வேட்டை சமூகமாக இருந்த காலத்திலிருந்து நாய்கள் மனிதர்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. நகரமயமாக்கல் மற்றும் நாகரீக மாற்றத்தால் பெருநகரங்களில் நாய்கள் தனித்து வளர வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டன. நாய்களுக்கு சில தேவைகள் உள்ளன. உணவு, சுதந்திரமான நடமாட்டம், உயிரியல் தேவைகள் ஆகியவை முதன்மையானவை. வளர்ப்பு நாய்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைத்து விடும். ஆனால் சுதந்திரமோ, உயிரியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வழிகள் இருக்காது. இதன் காரணமாக வளர்ப்பு நாய்களும் சில சமயங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும். அதேசமயம் தெருநாய்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் மற்றும் உயிரியல் தேவைகள் பூர்த்தி அடைந்தாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் பசி காரணமாக ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன.

தெரு நாய்கள் யாரை குறி வைக்கும்?

தெரு நாய்கள் குழந்தைகளை முதன்மையாக குறி வைக்கின்றன. வயது வந்தவரை துரத்தும் பொழுது அவர் குரல் எழுப்பினாலோ அல்லது தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ நாய்கள் பின்வாங்கி விடும். ஆனால் குழந்தைகள் உடனடியாக திருப்பித் தாக்கவோ, எதிர்வினை ஆற்றவோ முடியாது என்பதால் தெரு நாய்கள் குழந்தைகளை முதலில் குறிக்கின்றன. குழந்தைகள் தெருநாய்களுக்கு எளிமையான இலக்காக இருக்கின்றன. வளர்ப்பு நாய்களுக்கு உரிமையாளர்கள் அக்கறையும், பாசமும் செலுத்துவார்கள். ஆனால் தெரு நாய்களுக்கு அதுபோன்ற பரிவு கிடைப்பதில்லை. இதன் காரணமாகவும் வழிப்போக்கர்களிடம் தெரு நாய்கள் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. பேரிடர் சமயங்களில் தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பதும் கடினம். அப்போது அவை அச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் மனிதர்களை தாக்குவது துரத்துவது என்பது அதிகமாக இருக்கும்.

உணவை வைத்தே இடத்தை தீர்மானிக்கின்றன

தெரு நாய்களிடம் குழு மனப்பான்மை என்பது அதிகமாக இருக்கும். உலவும் பொழுதோ, உணவு தேடும் பொழுதோ, சாப்பிடும் பொழுதோ அனைத்தையும் ஒன்றாக மேற்கொள்கின்றன. தெருநாய்கள் தனியாக இருப்பதைவிட குழுவாக இருக்கும் பொழுது ஆபத்துகள் அதிகம். அனைத்து தெரு நாய்களும் ஆபத்தானவை என்று பொதுவாக கூறி விட முடியாது. அனைத்து தெரு நாய்களும் ஆக்ரோஷமாக நடந்து கொள்பவை அல்ல. தற்போது நாய்கள் மனிதர்களின் தலையீடு இல்லாமல் மனிதர்களை சார்ந்து இல்லாமல் வாழ கற்றுக் கொண்டுள்ளன. நாய்கள் தங்களுக்கு உணவு கிடைப்பதை பொறுத்து எல்லைகளை தீர்மானிக்கின்றன. ஒரு இடத்தில் தொடர்ந்து உணவு கிடைக்கும் பட்சத்தில் அந்த இடத்திலேயே அவை தங்கிக் கொள்ளும். உணவு கிடைப்பது நின்று விட்டால் அதை வேறு இடத்தை நோக்கி நகர்ந்துவிடும்.

தெரு நாய்கள் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்

தெரு நாய்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் அவற்றின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. உதாரணமாக நாய் மீது கல் எறிவது, கட்டையால் தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த நாய் மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும். தங்களது குழுவில் இருக்கும் வேறு நாய் மீது வாகனம் மோதி இருந்தால் அந்த நாய்கள் வாகனங்களைக் கண்டால் துரத்தும். அவை பெற்ற அனுபவங்களை பொறுத்து அவற்றின் நடத்தையும் மாறும். இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது நாய்கள் துரத்தினால் சற்று வேகமாக செல்ல வேண்டும். நடந்து செல்லும் பொழுது கைவசம் குச்சி அல்லது வேறு பொருளை வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நாய்கள் தாக்காது. அவை நமக்கு அச்சத்தை ஏற்படுத்தவே பார்க்கின்றன. நாம் உரத்த குரலில் சத்தம் எழுப்பினாலோ அல்லது ஏதாவது பொருளை காண்பித்து பயம் காட்டினாலோ நாய்கள் பின்வாங்கி விடும் என நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

பிற ஆலோசனைகள்

தெரு நாய்கள் உங்களைத் துரத்தும் பொழுது அதனை கண்டு பயந்து ஓடுதல் கூடாது. ஓடினால் நீங்கள் அதை அச்சுறுத்துவதாக நினைத்து, மேலும் துரத்தத் தொடங்கும். பயம் நாய்களுக்கு ஒரு வகையான சவால் தான். நீங்கள் ஓடினால் அது உங்களை மேலும் துரத்தலாம். நீங்கள் ஒரே இடத்தில் அசையாமல் நின்றால் குழம்பிப் போகலாம். இதனால் அதன் கவனம் சிதறி உங்களை துரத்துவதை நிறுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் நாயின் கண்களை நேராக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் அது தாக்குதலுக்கு நீங்கள் தயாராக இருப்பதாக நினைக்கும். உங்கள் கையில் இருக்கும் தண்ணீர் பாட்டில் அல்லது வேறு ஏதேனும் பொருள் இருந்தால் எதிர் திசையில் எறியலாம். இதனால் நாயின் கவனம் சிதறி அது எதிர் திசையை நோக்கி ஓடும். அசையாமல் இருக்க முடியாமல் போனால் உங்கள் கைகளை முகத்துக்கு அருகில் வைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் நாயிடம் இருந்து உங்கள் முகம் பாதுகாக்கப்படும்.

பொதுவான வழிமுறைகள் மட்டுமே

நாய் உங்களை நெருங்கி வருவது போல தோன்றினால் அமைதியாகவும் மெதுவாகவும் விலகிச் செல்லுங்கள். நாயின் கண்களை பார்க்காமல் வேறு எங்காவது பாருங்கள். நாய் உங்களை துரத்துவதற்கு காரணம் அதன் எல்லையில் நீங்கள் இருக்கலாம். எனவே அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள். மேற்கூறப்பட்டுள்ளவை நாயின் தாக்குதலில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான சில பொதுவான வழிமுறைகள் தான். நாயால் கடிபட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் முற்றினால் மரணம் கூட ஏற்படலாம். எனவே நாய்க்கடியிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க