Bhogi pongal 2023: தீமைகள் விலக்கும் போகி பண்டிகை வரலாறு என்ன?  இந்திரனை வணங்கும் பின்னணி இதோ!  

By Pani MonishaFirst Published Jan 10, 2023, 11:36 AM IST
Highlights

Bhogi 2023: போகி பண்டிகை அன்று இந்திரனை ஏன் வழிபடுகிறார்கள் என்பது குறித்து இங்கு காணலாம். 

'பழையன கழிந்து புதியன புகுதல்' போகி பண்டிகையின் சுருக்கமான விளக்கமாக பார்க்கப்படுகிறது. ஆனால் முன்பு விவசாயத்திற்கு வேண்டிய மழையை அருளும் இந்திரனை தான் அந்நாளில் மக்கள் வழிபட்டார்கள். தமிழ்நாட்டில் போகி பண்டிகை ஜனவரி மாதம் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முந்தைய நாள் தான் போகி. தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மகர சங்ராந்தி விழாவின் முதல் நாள் போகிதான். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட்டம் 4 நாள்கள் விமரிசையாக இருக்கும். இந்தாண்டு பொங்கள் விழா ஜன.14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. போகி பண்டிகையின் வரலாற்றை இங்கு காணலாம். போகி என்றாலே பழைய குப்பைகளை தீயிட்டு கொழுத்துவதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் மழை தெய்வமான இந்திரனுக்கு வழிபாடு நடத்தும் பண்டிகையாகவும் போகி உள்ளது.

இந்த வழிபாட்டில் விவசாயிகள் நல்ல விளைச்சலுக்காக மனமுருகி இறைவனை வழிபடுகின்றனர். விவசாயத்திற்கு உதவும் கருவிகளை அன்று வணங்கி நன்றி செலுத்துகின்றனர். தொடர்ந்து உபயோகமில்லா பழைய பொருள்களை சாணம், பிண்ணாக்கு ஆகியவை கொண்டு மூட்டிய தீயிலிட்டு எரிக்கின்றனர். இதையே போகி மந்தலு என குறிப்பிடுகின்றனர். பழைய பொருள்களை மட்டுமில்லாமல், எதிர்மறையான பழைய சிந்தனைகளையும் மாற்றி புதிய அத்தியாயத்திற்குள் நுழையும் வாய்ப்பாகவே போகி கொண்டாடப்படுகிறது. 

போகி மற்ற பெயர்கள் 

போகி பண்டிகை சில தென்னிந்திய மாநிலங்களில் பெத்த பாண்டுகா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இப்பண்டிகை காத்தாடி விழா என அழைக்கப்படுகிறது. இந்திரனுக்கு போகி என ஒரு நாமம் இருப்பதும் போகி பண்டிகை என அழைக்க காரணமாயிற்று. 

புராண கதை! 

விவசாயத்திற்கு தேவையான மழைநீரை அருளும் இந்திரன் பகவான், தான் பொழியும் மழையாலே விவசாயிகள் செழிப்பாக வாழ்கிறார்கள் என்று கர்வம் கொண்டார். அவருடைய கர்வத்தை கட்டுக்குள் கொண்டுவர கிருஷ்ண பகவான் முடிவு செய்தார். அதன்படி இந்திரனை வழிபட விடாமல் மக்களை கோவர்த்தன மலைக்கு திருப்பி அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த இந்திரன் ஒரு வாரம் அடை மழை பொழிய செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தினார். 

இதையும் படிங்க; பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?

அப்போது கோவர்த்தன மலையை குடையாக ஒற்றை விரலில் தாங்கி கிருஷ்ணன் அப்பாவி மக்களை காத்தார். 'தான்' எனும் கர்வம் கொண்ட இந்திரனின் ஆணவத்தையும் அடக்கினார். அதன் பிறகு கிருஷ்ணனுக்கு இந்திர பகவான் அடிபணியவே பிரச்சனை கட்டுக்குள் வந்தது. போகிப் பண்டிகை அன்று இந்திரனை வழிபட கிருஷ்ணன் வரம் அளித்ததாக நம்பப்படுகிறது. 

அலங்காரம் 

சில இடங்களில் குப்பைகளை எரிக்கும் நெருப்பை சுற்றி புத்தாடை அணிந்தபடி மக்கள் கோஷமிடுவார்களாம்.  இந்த பண்டிகையில் சாமந்தி மாலைகள், மாவிலைகள் தான் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் நல்ல ஆற்றல் குடிகொள்ள இந்த மலர்களும், இலைகளும் உதவும் என்பது ஐதீகம். இந்த பண்டிகையில் சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி நவிழும் விதமாக குங்குமம் வைத்து வழிபடுவார்கள். இந்த வழிபாடுகளுடன் வரும் போகியையும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். 

இதையும் படிங்க; திருமணம் கைகூட கன்னி பொங்கல்! காணும் பொங்கலும் அதன் வழிபாடுகளும் முழு விளக்கம்!

click me!