Parenting Tips : ஒன்று முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற எடை, உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவர். தங்கள் குழந்தைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் நோக்கமாக இருக்கும். அதற்காக தங்கள் உடல் உழைப்பையும், சந்தோஷங்களையும் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள். இப்படி அக்கறையாக இருக்கும் பெற்றோருக்கு கவலையும் இருக்கும். அதாவது தங்கள் குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சியில் தான் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எழும். இந்த கேள்விகளுக்கு விடை தேடும் இந்த பதிவை இங்கு காணலாம்.
உங்களுடைய குழந்தை அவர்களுடைய வயதுக்கேற்ற உயரத்திலும், எடையிலும் இருந்தால் அவர்கள் சரியான வளர்ச்சியில் இருக்கிறார்கள் என பொருள் கொள்ளலாம். அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கிறது என புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை ஆரோக்கியமான உணவை பெறுகிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும். உங்களுடைய குழந்தை சத்தான உணவுகளை தவிர்த்து துரித உணவுகளையோ, நொறுக்குத் தீனிகளையோ மட்டுமே அதிகமாக சாப்பிடுவதால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. வளர்ச்சி பாதிப்படையும். இது அவர்களுடைய உயரத்தையும், எடையையும் உயர்த்துவதில் பெரும் சிக்கலாக வந்துவிடும். நீங்கள் குழந்தைக்கு சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவு கொடுத்து அவர்களை வளர்க்கும்போது வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். இது உறுதி செய்ய அவ்வப்போது அவர்களுடைய எடை, உயரம் ஆகியவற்றை அளவிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வீட்டில் அவர்களுடைய உயரத்தை ஒவ்வொரு வயதிற்கும் ஏற்றபடி அளவிட்டு சுவற்றில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய வயதுக்கு ஏற்ப உயரமும், எடையும் அதிகரிப்பதை இப்படி அளவிடுவதன் மூலம் படிப்படியாக கண்காணிக்க முடியும். உங்களுடைய குழந்தை வயதுக்கு ஏற்றபடி வளரவில்லை என்றால் அவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். மருத்துவரிடம் அழைத்துச் சென்று முறையான ஆலோசனை பெற வேண்டும்.
இதையும் படிங்க: இரவில் குழந்தைகளுக்கு பால்; அம்மாக்கள் செய்யும் தவறு!!
வயதுக்கேற்ப குழந்தையின் உயரம், எடை:
ஒரு வயது:
உங்கள் குழந்தைக்கு ஒரு வயது என்றால் 9.2 கிலோ எடை இருக்க வேண்டும். 29.2 அங்குலம் உயரம் இருப்பது அவசியம்.
இரண்டு வயது:
உங்கள் குழந்தைக்கு 2 வயதென்றால் 12 கிலோ உடல் எடையும், 33.5 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
மூன்று வயது:
மூன்று வயது குழந்தை என்றால் சுமார் 14.2 கிலோ எடை இருப்பது நல்லது. 37 அங்குலம் உயரம் இருந்தால் நலம்.
நான்கு வயது:
நான்கு வயதென்றால் 15.4 கிலோ எடையும், 39.5 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
ஐந்து வயது:
உங்கள் குழந்தை 5 வயதென்றால் 17.9 கிலோ எடையும், 42.5 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
ஆறு வயது:
உங்கள் குந்தைக்கு 6 வயதெனில் 19.9 கிலோ எடையும், 45.5 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
ஏழு வயது:
ஏழு வயதென்றால் 22.4 கிலோ எடையும், 47.7 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
எட்டு வயது:
குழந்தைக்கு 8 வயதாகும் போது 25.8 கிலோ எடையும், 50.5 அங்குலம் உயரமும் இருந்தால் ஆரோக்கியம்.
ஒன்பது வயது:
குழந்தைகள் 9 வயது ஆகும்போது 28.1 கிலோ எடை இருக்க வேண்டும். உயரம் 52.5 அங்குலம் இருப்பது நல்லது.
பத்து வயது:
பத்து வயதில் குழந்தைகள் 31.9 கிலோ எடை இருக்க வேண்டும். உயரத்தை பொறுத்தவரை 54.5 அங்குலம் இருப்பது நல்லது.
பதினொரு வயது:
11 வயது வரும்போது 36.9 கிலோ எடையும், 56.7 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
பன்னிரெண்டு வயது:
பன்னிரெண்டு வயதில் குழந்தைகள் 41.5 கிலோ எடையாவது இருக்க வேண்டும். உயரம் 59.0 அங்குலமாவது இருக்க வேண்டும்.
பதிமூன்று வயது:
இந்த வயதில் 45.8 கிலோ எடையும், 61.7 அங்குலம் உயரமும் இருக்க வேண்டும்.
14 மற்றும் 15 வயது:
பதினான்கு 47.6 கிலோ 62.5 அங்குலம் உயரம், பதினைந்து வயதில் குழந்தை 53.5 கிலோ எடையும், 64.0 அங்குல உயரமும் உடையவராக இருக்கவேண்டும்.
இதையும் படிங்க: ஸ்கூல் போற குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய '5' ஊட்டச்சத்து உணவுகள்!!
எடை, உயரத்தில் ஏன் மாற்றம் வருகிறது?
வயதுக்கு ஏற்ற எடை, உயரம் அதிகரிக்க வேண்டும். அதற்கு குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு கிடைக்க வேண்டும். ஏனென்றால் உணவுதான் வளர்ச்சியில் முக்கிய பங்கு காரணம் வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு தாதுக்கள், புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவை அளிக்க வேண்டும். இதுவே அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் மேம்படுத்தும்.
குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது எவ்வளவு அவசியமோ, அதேபோலவே ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தி அவர்களின் எடையையும், உயரத்தையும் அதிகரிக்க நல்ல உணவும் உடல் செயற்பாடுகளும் அவசியம். அதாவது விளையாட்டு, உடற்பயிற்சிகள் அவசியமானது. சில குழந்தைகள் தங்கள் பாரம்பரிய பண்புகள் (ஜீன் அடிப்படையில்) காரணமாக அவர்கள் வளர்ச்சி பெரியளவில் இருக்காது. அதற்கு பயப்படத் தேவையில்லை.