Watermelon juice: விலை குறைந்த தர்பூசணி பழத்தினை, உடல் சூட்டை தணிப்பதற்கு எந்தெந்த முறைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கோடை காலம் வந்து விட்டாலே, சூரியனில் வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்து விடும்.இந்த ஆண்டு, ஆரம்ப நேரத்திலேயே வெயில் கொடுமை அதிகமாகவே இருக்கிறது. அந்த சமயம் அடிக்கடி பசி இன்மையும், அதிக தண்ணீர் தாகம் ஏற்படுவதையும், நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உடல் சூடும் அதிகரித்திருக்கும். சிலருக்கும், உதட்டில் வெடிப்பு, புண்கள் நாக்கு வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இந்த நேரத்தில், குளிர்ச்சியான பானங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இளநீர், மோர், கரும்பு ஜூஸ் போன்றவை குளிர்ச்சியை ஏற்படுத்தும். இவற்றை தவிர்த்து, வாட்டர் மெலன் அல்லது தர்பூசணி பழம் உடல் சூட்டை தணிப்பதற்கு நல்ல பானமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இவற்றில் விலையும் தற்போது குறைவாக உள்ளது. 1 கிலோ 10 ரூபாய் என்ற விலையில், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. கண்டிப்பாக, சந்தையில், இதன் விலை குறைவாக தான் இருக்கும். இவற்றை எந்தெந்த முறைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தர்பூசணி ஜூஸ் 1:
முதலில் தர்பூசணி பழத்தை இரண்டாக வெட்டி கொண்டு, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி கொள்ள வேண்டும். பிறகு அதிலுள்ள சதைப்பற்றுள்ள பகுதிகளை மட்டும் பொடியாக நறுக்கி, எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், பின்னர் மிக்ஸி ஜாரில் செய்த தர்பூசணி பழத்துடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சப்ஜா விதையை தண்ணீரில் சேர்த்து நன்றாக ஊற வைத்து சேர்க்க வேண்டும்.பின்னர், இதனை வடிகட்டி, இந்த ஜூஸுடன் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சில்லென்று குடித்து பாருங்கள் அருமையாக இருக்கும்.
தர்பூசணி ஜூஸ் 2 :
ஒரு மிக்ஸி ஜாரில் தர்பூசணி பழங்களை பொடியாக நறுக்கி, கொட்டைகளை நீக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், இதனுடன் ஒரு பத்து இதழ் புதினா தழைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர், இதனுடன் ஐஸ்க்யூப்ஸ் சேர்த்து குடிக்க வேண்டும்.
தர்பூசணி ஜூஸ் 3 :
தர்பூசணி பழத்தை இரண்டாக வெட்டி கொண்டு, அதில் உள்ள கொட்டைகளை நீக்கி, அதிலுள்ள சதைப்பற்றுள்ள பகுதியை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறும் பிழிந்து கொள்ளுங்கள். பிறகு இவற்றுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி சேர்க்க வேண்டும்.
மைய அரைத்ததும் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐஸ் கட்டிகளை போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கு மட்டுமல்ல உடலுக்கே ஜில்லென இருக்கும்.