
நட்பு என்பது வெறும் உறவு மட்டுமல்ல நம்பிக்கை, புரிதல், உணர்ச்சியின் வலுவான பிணைப்பு ஆகும். ஒரு நல்ல நண்பர் வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்தாக இருப்பார். அதேசமயம் கெட்ட நண்பர் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் மன அமைதியை அழித்துவிடுவார். எனவே யாருடன் பிரண்ட்ஷிப் வைக்க வேண்டும், வைக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.
இத்தகைய சூழ்நிலையில் உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கை, வேலை மற்றும் தொழில் போன்றவற்றின் வளர்ச்சியை விரும்பாத சில நண்பர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். அவர்கள் யார் யார்.. எப்படிப்பட்ட குணமுள்ளவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சுயநலவாதிகள்
தங்களது சொந்த நலனுக்காக மட்டுமே உங்களிடம் நட்பாக பழகி உங்களது கடினமான காலங்களில் காணாமல் போகும் குணமுள்ளவர்கள் நல்ல நண்பர்கள் அல்ல. இவர்கள் உங்களுக்கு ஒருபோதும் நல்லது நடக்க வேண்டும் என்றும் நினைக்க மாட்டார்கள். இத்தகையவர்கள் எப்போதுமே உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே தருவார்கள். எனவே இந்த குணமுள்ளவர்களிடம் நீங்கள் நட்பாக பழகுவதற்கு பதிலாக அவர்களை தூரமாக வைப்பது தான் உங்களுக்கு நல்லது.
2. உணர்ச்சிகளுடன் விளையாடுபவர்
உங்கள் உணர்வுகளை அடிக்கடி புண்படுத்தி விட்டு அதற்காக மன்னிப்பும் கேட்டு, பிறகு மீண்டும் அதே தவறை செய்பவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அத்தகைய குணம் உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.
3. எதிர்மறை சிந்தனையாளர்கள்
எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள் எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே பேசுவதும், செயல்படுவதுமாகவே இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். அதில் குற்றம் குறைகளை கண்டுபிடித்து எதிர்மறையாகவே பேசுவார்கள். இவர்களிடம் நட்பாக பழகினால் உங்களது லட்சியங்கள், கனவுகள் அனைத்தும் சிதைந்து விடும். இவர்களின் எதிர்மறையான பேச்சுக்கள் கருத்துக்கள் உங்களை முன்னேற விடாது எனவே இத்தகைய குணம் உள்ளவர்களிடம் நீங்கள் விலகி இருப்பது தான் உங்களுக்கு நல்லது.
4. பொறாமை உள்ளவர்கள்
உங்களது முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடையாமல் உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள். உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றி அவதூறு பேசி, உங்கள் முன்னால் காட்டி கொடுப்பார்கள் இத்தகைய குணம் உள்ளவர்களிடமிருந்து உடனே விலகி இருங்கள்.
5. வதந்தி பரப்புபவர்கள்
பிறரைப் பற்றி தவறாக பேசி தங்களது அடையாளத்தை நிலை நாட்ட விரும்புபவர்கள் ஒருபோதும் உண்மையாக இருக்கவே மாட்டார்கள். எனவே இத்தகையவர்களிடம் இருந்து உடனே விலகி இருங்கள்.
6. உங்கள் சுதந்திரத்தை பறிப்பவர்
உங்களது ஒவ்வொரு முடிவிலும் தலையிட்டு, உங்கள் லட்சியங்களை மீண்டும் கேள்வி கேட்கும் நபர்கள் உங்களை ஒருபோதும் முன்னேற விடமாட்டார்கள்.
7. தவறான பாதை காட்டுபவர்
பொய் சொல்லுதல், பொறுப்பற்ற நடத்தை, போதை பொருளுக்கு அடிமை போன்ற கெட்ட கெட்ட பழக்கங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும் நண்பரிடம் இருந்து விலகி இருப்பது தான் உங்களுக்கு நல்லது.
8. பிறரை மட்டம் தட்டுபவர்
தன்னை மட்டும் எப்போதுமே உயர்த்தியும், பிறரை மட்டம் தட்டியும் பேசுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பிறரது சாதனையை பாராட்டாமல் அதைக் குறைத்து மதிப்பிடுவார்கள் மற்றும் தேவையில்லாத மன நிம்மதியையும் கெடுப்பார்கள். இத்தகைய குணம் உள்ளவர்களிடமிருந்து விலகி இருங்கள்.
9. கம்போர்ட் சோனில் இருப்பவர்
எதற்கும் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் கம்ஃபோர்ட் சோனில் சிலர் இருப்பார்கள். இவர்கள் எந்தவொரு புதிய விஷயத்தையும் கற்றுக் கொள்ள ஆறுபட மாட்டார்கள் புதிய இடங்களில் பணிபுரியவும் விரும்ப மாட்டார்கள். அவர்கள் அப்படி இருப்பது மட்டுமல்லாமல் தன் நண்பனையும் முன்னேற விடமாட்டார்கள். அவர்களது முன்னேற்றத்தை தடுத்து மனதையும் மாற்றி விடுவார்கள். எனவே இப்படிப்பட்ட நபரிடம் நட்பு கொண்டிருந்தால் உங்களது தனிப்பட்ட வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இவர்களிடம் நட்பாக பழகாதீர்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.