பருவநிலை மாற்றத்துக்கு உலகம் இழக்கபோகும் முதல் நாடு துவாலு தீபகற்பம்!! இந்த நாட்டின் அற்புதம் என்ன?

By Dhanalakshmi G  |  First Published Aug 5, 2023, 2:33 PM IST

பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலு உலகின் மிகச்சிறிய தீபகற்ப நாடு. இது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் முற்றிலுமாக நாம் இழக்கும் உலகின் முதல் நாடாக துவாலு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் மட்டம் உயரும்போது, ​​அதன் தலைநகரான ஃபுயுனாஃபுட்டியின் பாதி நிலப்பரப்பு அடுத்த 30 ஆண்டுகளில் கடல் அலைவெள்ளத்தில் மூழ்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


துவாலு சிறப்பு என்ன?
பசிபிக் பெருங்கடலின் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள சிறிய நாடு துவாலு தீபகற்பம். அமைதியான மற்றும் மாசுபடாத சூழலில் சோர்வுடன் சென்று ஓய்வு எடுக்கும் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. பவளப்பாறைகள், சிறிய தீவுகள், கடலில் இருந்து பிரிந்து சிறிய சிறியதாக உருவாகி இருக்கும் உப்பு ஏரிகள் ஆகியவற்றால் இந்த தீபகற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தென் கடல் பகுதியில் இது அழகான, சோர்வை நீக்கும் ஒரு சுற்றுலா பகுதியாக இருந்து வருகிறது.

எங்கு இருக்கிறது துவாலு:
ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே இந்த நாடு இருக்கிறது. பவளப் பாறைகள், குட்டி ஏரிகள் என்று ஒரு கோர்வையாக இந்த நாடு அமைந்து இருக்கிறது. பசிபிக் கடல் பரப்பில் இந்த நாட்டை மறைந்திருக்கும் ஒரு அற்புதம், மாணிக்கம் என்று கூட கூறலாம். நகர வாழ்க்கையை வெறுத்து மன நிம்மதி வேண்டும், அமைதி வேண்டும், ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த நாடு மிகவும் பொருத்தமானது.

Latest Videos

undefined

துவாலு நாணயம், விமான நிலையம்:
பசிபிக் கடல் பகுதியில் மிகவும் ஒதுக்குப்புறமாக, சிறிய நாடாக இருப்பதால் இங்கு சுற்றுலாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைவுதான். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 12,000. உலக நாடுகளிலேயே இந்த நாட்டிற்குத்தான் குறைந்த அளவில் மக்கள் வந்து சென்றுள்ளனர். இந்த நாட்டுக்கு என்று தனிப்பட்ட நாணயம் இருக்கிறது. தனி பண்பாடு இருக்கிறது. ஆண்டுக்கு வெறும் 2000 பேர் மட்டுமே இந்த நாட்டுக்கு வந்து செல்கின்றனர். இங்கு ஒரே ஒரு விமான நிலையம் உள்ளது. இதையும் இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இந்த விமான நிலையத்தை அமைத்து இருந்தது. இன்று பிஜி ஏர்வேஸ் மட்டும் இந்த நாட்டுக்கு விமானத்தை இயக்கி வருகிறது.

கடல் அரிப்பு:
பிரச்சனையே இங்குதான் இருக்கிறது. பசிபிக் கடலின் மட்டம் அதிகரித்து வருவதுதான். கடல் நீர்மட்டம்  அதிகரிப்பு மற்றும் கடலோர அரிப்பு ஆகிய காரணங்களால் துவாலு தீபகற்ப நாட்டில் இருக்கும் ஒன்பது தீவுகளில் இரண்டு தீவுகள் எதிர்காலத்தில் கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. புயல்களின் போது, இரண்டு பக்கங்களிலிருந்தும் அலைகள் வந்து, இந்த தீவுகளின் இருப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

துவாலு வரலாறு:
முன்பு எல்லிஸ் தீவுகள் என்று அழைக்கப்பட்ட துவாலு 1978-ல் சுதந்திரம் பெறும் வரை கில்பர்ட் என்ற  பிரிட்டிஷ் காலனியின் ஒரு பகுதியாக இருந்தது. இது செப்டம்பர் 5, 2000 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் 189 வது உறுப்பு நாடாக சேர்ந்தது.

துவாலு மக்கள் வெளியேற்றமா?
துவாலுவின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஏனெனில் அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4.6 மீட்டர் (15 அடி) உயரத்தில் உள்ளது. அதிகரித்து வரும் கடல் மட்ட அச்சுறுத்தலால் தீபகற்ப நாடுகள் ஒரு சில அடி நீரில் மூழ்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் அங்கு வசிக்கும் மக்களை நியூசிலாந்து அல்லது பிஜி போன்ற நாடுகளில் குடியமர்த்துவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி. இங்கு செய்யப்படும் விவசாயப் பயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தீவு நாடுகளுக்குள் உப்பு நீர் ஊடுருவதால் சாமை மற்றும் தென்னை போன்ற அத்தியாவசிய பயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

பருவநிலை மாற்றம்:
உலகின் மாணிக்கமாக, பலராலும் அறியப்படாமல் இருக்கும் துவாலு பருவநிலை மாற்றத்திற்கு இரையாகும் முதல் நாடாக இருக்கப் போகிறது என்பது வருத்தமான செய்தி.  எனவே, இந்த பருவநிலை மாற்றத்தை எப்படி சரி செய்வது என்பது மனிதர்களிடமே இருக்கிறது. இயற்கையை ஒட்டி வாழ்வதுதான் மனித சமுதாயத்துக்கு நல்லது என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.

click me!