நாம் விரும்பி சாப்பிடும் தோசையை சுட்டு எடுக்க உதவும் தோசைக் கல்லை, எளிய வழிமுறைகள் கொண்டு சுத்தம் செய்வது தொடர்பான விபரங்களை பார்க்கலாம்.
பொதுவாக நாம் வீடுகளில் பலரும் இரும்பினால் செய்யப்பட்ட தோசைக் கல்லில் தான் தோசை சுடுவோம். இப்போது தான் நான் ஸ்டிக் தவா, இண்டோலியம் தவா போன்றவற்றை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். எனினும் ஆரோக்கிய நலன் கருதி இரும்பு தோசைக் கல்லை பயன்படுத்தும் மக்கள் தான் அதிகளவில் உள்ளனர். பலருக்கும் அதில் தோசை சுடும் அளவுக்கு, கல்லை சுத்தம் செய்ய தெரியவில்லை.
பொதுவாக இரும்பை தண்ணீரில் கழுவினால் எளிதாக துருபிடித்துவிடும். அதனால் சிலர் தோசைக் கல்லை அப்படியே பயன்படுத்தாமல் விட்டுவிட்டு தள்ளிவைத்துவிடுவார்கள். பிறகு வேறு ஒரு தோசைக் கல் வாங்குவார்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்களுடைய இரும்பு தோசைக் கல்லை சுத்தம் செய்தால், அது காலாகாலத்துக்கும் வரும்.
இரும்பு கல்லை பயன்படுத்தி உணவு சமைத்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு மிகவும் நல்லது. அதனால் எப்போதும் இரும்பு தோசைக் கல்லை பராமரிப்பது குறித்து தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த கடையில் இரும்பு தோசைக் கல் வாங்கினாலும் துருப்பிடித்ததை தான் தருவார்கள். நீங்கள் தான் அதை பக்குவப் படுத்த வேண்டும். ஒருசில கடைகளில் முறையாக பக்குவப்படுத்தி விற்பனை செய்யக்கூடிய இரும்பு தோசை கல்லும் உண்டு.
பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஓட... ஓட... விரட்டும் ஒரே பானம் இதுதான்..!!
புதியதாக வாங்கிய கல் என்றால், அதை அடுப்பில் வைத்து நன்றாக காயவிடவும். அதில் நன்றாக புகை கிளம்பும் வரைக்கும் காய வைக்க வேண்டும். பிறகு தீயை மிதமாக குறைத்துக் கொண்டு, தோசைக் கல் மீது உப்பு மற்றும் எலுமிச்சைப் பழச்சாற்றை போடுங்கள். சூடு அறியதும், எலுமிச்சைப் பழ தோல் கொண்டு துருப் பிடித்த இடங்களில் நன்றாக அழுத்தி தேயுங்கள். நன்றாக சூட்டில் உப்பு வைத்து தேய்ப்பதால், துரு கரை முழுவதுமாக நீங்கிவிடும்.
மேலே தேய்த்தது போன்று தோசைக் கல்லின் பின்புறமும் தேயுங்கள். அதை தொடர்ந்து சோப்பு போட்டு இரும்பு நார் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். அதை தொடர்ந்து தண்ணீர் தெளித்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு அரிசி வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவிய தண்ணீரில் குறைந்தது 24 மணிநேரம் வரை தோசைக் கல்லை ஊற வைக்கவும். பின்பு மறுநாள் அதை எடுத்து, நன்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
தொடர்ந்து கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் பாதி அளவு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தோசைக் கல்லில் வதக்கவும். பிறகு நீங்கள் தோசை ஊற்றலாம். இதில் தோசை சுட்டால் ஹோட்டல் மாஸ்டர் தோற்று போகும் அளவிற்கு மொறு மொறு தோசை சுட முடியும். ஒருவேளை உங்களுடைய பழைய கல் துரு பிடித்து இருந்தாலும், மேலே கூறப்பட்டுள்ள பக்குவ முறையை பின்பற்றலாம்.