Ragi Koozh Recipe : ராகி கூழ் நன்மைகள் மற்றும் அதை செய்வது எப்படி என்று இங்கு காணலாம்.
ராகியில் நம் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த சோகையை மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு ராகி கூழ் வரப்பிரசாதமாகும். அதுமட்டுமின்றி, பாலூட்டும் தாய்மார்கள் ராகி கூழ் குடித்து வந்தால் அவர்களுக்கு பால் அதிகமாக சுரக்கும். இந்த கூழை மோருடன் கலந்து குடித்து வந்தால் கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்கும். மொத்தத்தில் கேழ்வரகு கூழ் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சரி இப்போது கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்றும், அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கேழ்வரகு கூழ் செய்ய தேவையான பொருட்கள் :
undefined
ராகி மாவு - 2 ஸ்பூன்
மோர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
நீரா தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின் மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு அதில் மிதமான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் இருக்கும் தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதில் கரைத்து வைத்த மாவை ஊற்றி நன்றாக கிளறி விடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு நன்றாக வெந்ததும் கெட்டியாகி விடும். அதன்பிறகு அது அடுப்பிலிருந்து இறக்கி அதில் நீரா தண்ணீரை ஊற்றி அப்படியே மூடி வைத்து விடவும். இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள்.
பின் மறுநாள் காலை அதில் தேவையான அளவு உப்பு ,மோர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கேழ்வரகு கூழ் தயார். இதற்கு தொட்டுக்க மாங்காய், மோர், மிளகாய், அப்பளம், வடகம் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க: கேழ்வரகு மாவு கெட்டுப் போகாமல் வருட கணக்கில் பயன்படுத்த சூப்பரான டிப்ஸ் இதோ!!
கேழ்வரகு கூழ் நன்மைகள் :
1. எடையை குறைக்க உதவும் : கேழ்வரகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், இதில் கூழ் செய்து குடித்து வந்தால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் மற்றும் தேவையில்லாத உணவுகள் சாப்பிடும் ஆர்வம் தடுக்கப்படும். இதன் விளைவாக எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
2. எலும்பை வலிமையாக்கும் : கேழ்வரகில் கால்சியம் அதிகமாகவே உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் ரொம்பவே நல்லது என்பதால், கேழ்வரகை அடிக்கடி உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வரவே வராது.
3. செரிமானத்திற்கு நல்லது : கேழ்வரகில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்தானது சாப்பிடும் உணவை எளிதில் செரிமானமாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி கேழ்வரகு குடல் இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது. எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி தங்களது உணவில் கேழ்வரகு சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் உடனே நீங்கிவிடும்.
4. சர்க்கரை அளவை குறைக்கும் : ரத்த சர்க்கரை அளவை குறைக்க கேழ்வரகை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ராகி ரத்த சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
5. முடி உதிர்வை தடுக்கும் : உடலில் புரோட்டின் அளவு குறைவாக இருக்கும் போது தான் முடி உதிர்கிறது. கேழ்வரகில் புரோட்டின் அதிகமாகவே உள்ளதால் இதை உங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் முடி உதிர்வு பிரச்சனையை சுலபமாக தடுத்து விடலாம்.
6. முதுமையை தடுக்கும் : கேழ்வரகில் இருக்கும் லைசின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது.
7. தசைகளை வலிமையாக உதவுகிறது : கேழ்வரகில் புரோட்டின் அதிகமாகவே உள்ளது. இது தவிர இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை தசைகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. எனவே கேழ்வரகு அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது தசைகள் வலிமையாகும். மேலும் இது ஹார்மோன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
8. புற்றுநோயை தடுக்க உதவுகிறது : கேழ்வரகில் இருக்கும் பண்புகள் புற்றுநோயின் அபாயத்தை தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவும் குறிப்பாக அதில் இருக்கும் லிக்னன் என்னும் சத்து பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயின் அபாயத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. எனவே பெண்கள் தங்களது உணவில் அடிக்கடி கேழ்வரகை எடுத்துக்கொண்டால் புற்றுநோய் அபாயத்தை சுலபமாக குறைத்து விடலாம்.
இதையும் படிங்க: கோதுமையா, ராகியா? உடலுக்கு சத்துக்களை அள்ளி தருவது எந்த 'மாவு' தெரியுமா?
பிற நன்மைகள் :
கேழ்வரகு மன அழுத்தம், தூக்கமின்மை, உயரத்த அழுத்தம், கல்லீரல் நோய், இதய நோய் போன்ற அனைத்து நோய்களையும் குணமாக உதவுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறை கேழ்வரகில் கூழ் செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வீர்கள்.