புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருவாய் பெருகும்.. ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணர் அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Jan 28, 2021, 10:24 AM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் 60 நாட்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு பெரும் கலவரம் வெடித்தது. இதில், ஒரு விவசாயி உயிரிழந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறுகையில்;-  இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஆற்றலை பெற்றுள்ளன என்பது உண்மை. அதே நேரத்தில் அந்த சட்டங்களால் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு வலையை இந்திய அரசு உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தரகர்கள் நீக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கான சந்தைப்படுத்துதல் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் வரி செலுத்தாமல் கிடங்குகளில் விளைபொருள்களை இருப்பு வைத்து பல விற்பனை நிலையங்களுக்கு விற்க முடியும். இது எங்கள் பார்வையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகவே கருதுகிறோம். 

ஒவ்வொரு முறையும் ஒரு சீர்திருத்தம் அமல்படுத்தப்படும்போது, சில மாற்றங்களால் பாதிப்புகள் ஏற்படக் கூடும். எனவே, விவசாயிகளுக்கான சமூக பாதுகாப்பு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியம். பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளுக்குத் தீங்கு விளையாது என்பதற்கும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக, விவசாயிகளுடன் விவாதம் நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டியது அவசியம்.

இருப்பினும், இந்த வேளாண் சட்டங்கள் யாவும் பெரு நிறுவனங்களுக்கு சார்பானவை என்றுக் கூறி விவசாயிகள் சங்கத் தலைவர்கள் இதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசைக் கோரி வருகின்றனர். அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தின் கீழ் விளைபொருள்களை வாங்குவதற்கான சட்டபூர்வமான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றார்.

click me!