Puthina Satham Recipe : இந்த கட்டுரையில் புதினா சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தினமும் மதியம் சாம்பார், சாதம், கூட்டு, பொரியல், ரசம் என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஏதாவது, வித்தியாசமான சுவையில் அதுவும் ஸ்பெஷலா சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? முக்கியமாக, விரைவில் செய்து முடிக்கும் வகையில் ஒரு ரெசிபி. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
உங்களுக்கு வெரைட்டி ரைஸ் சாப்பிட பிடிக்கும் என்றால், புதினா சாதம் செய்து சாப்பிடுங்கள். இந்த புதினா சாதம் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். முக்கியமாக, இந்த ரெசிபி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இந்த புதினா சாதத்தை நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக லஞ்ச் பாக்ஸில் அடைத்து கொடுக்கலாம். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த புதினா சாதம் செய்து கொடுங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் புதினா சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: அசத்தலான சுவையில் மீல்மேக்கர் பிரியாணி!!
புதினா சாதம் செய்ய தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 20
இஞ்சி - 10 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
பட்டை - 1
லவங்கம் - 1
அன்னாச்சி பூ - 1
மிளகு - 1
சோம்பு - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
நெய் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: கல்யாண வீட்டு சுவையான பிரிஞ்சி ரைஸ்..இனி வீட்டிலும் செய்யலாம்..ரெசிபி இதோ!
செய்முறை :
புதினா சாதம் செய்ய முதலில், எடுத்து வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி பிறகு அதை சுமார் 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டைய, இலவங்கம், அன்னாச்சி பூ, மிளகு ஆகியவற்றை போட்டு சுமார் 30 வினாடிகள் வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சுமார் 5 நிமிடம் வதக்கவும். அதன்பிறகு அதில் தேங்காய் துருவல், புதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு இவற்றை ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆற வைக்கவும். அவை நன்கு ஆறியதும், அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அடுத்து அதில் சோம்பு, கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும் பிறகு இதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனை அடுத்து கழுவி வைத்த பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்து, ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது 2 1/2 கப் அளவில் தண்ணீர் அதில் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து ஒருமுறை கிளறி விடுங்கள். இப்போது குக்கரில் மூடி 3 விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனதும், ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் புதினா ரைஸ் ரெடி. இந்த புதினா சாதத்திற்கு நீங்கள் வெங்காய பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D