
மார்கழி மாதத்தில் சிறப்பாகப் பாடப் படும் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும் விளக்கமும்!
திருப்பாவை - பாசுரம் 7
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
பாசுரத்துக்கான விளக்கம்:
திருப்பாவை ஆறாம் பாசுரத்தில் இயற்கையின் விழிப்பைச் சொல்லி, கண்ணுறக்கம் கலைந்து எழுமாறு தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அவள் எழுந்திருக்காதது கண்டு மேலும் சில நிமித்தங்களைச் சொல்லி துயில் கலைந்து எழுமாறு வேண்டுகிறார் இந்த ஏழாம் பாசுரத்தில்.
பரத்வாஜ பறவைகள் ஒன்றோடு ஒன்று பேசியும் குலவியும் கீச்சு கீச்சு என்று எங்கும் ஆரவாரம் செய்கின்றன. இந்த ஆரவாரத்தை இன்னும் நீ கேட்கவில்லையோ.. ஏ மதியற்ற பெண்ணே.
நறுமணம் கமழும் பரிமளப் பொருள்களினால் அணிசெய்த கூந்தலை உடையவர்கள் இந்த இடைப் பெண்கள். அவர்களின் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் ஒன்றோடு ஒன்று உரசி கலகலவென்று ஒலி எழுப்புகின்றன. அவர்கள் தங்கள் கைகளில் மத்தினை எடுத்து, அசைத்து அசைத்து தயிர் கடைகிறார்கள். அவ்வாறு கடையப்படும் தயிரின் ஒலியை நீ கேட்கவில்லையோ? பெண்களுக்குத் தலைவியாக, நாயகமாக விளங்குபவளே...
ஸ்ரீமந் நாராயணனை, அந்தக் கண்ணபிரானை, கேசவனை, நாங்கள் போற்றிப் பாடி நிற்கின்றோம். அந்தப் பாடல்களைக் கேட்டும் நீ உறங்கிக் கிடப்பாயோ? மிகுந்த ஒளி பொருந்தியவளே. நீயே எழுந்து வந்து கதவைத் திற என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
***
திருவெம்பாவை பாடல் 7
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
பாடலுக்கான விளக்கம்:
படுக்கையில் துயின்றும் துயிலாது கண் விழித்திருக்கும் பெண்ணிடம் தோழியர் கேட்கின்றனர்... அம்மா! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?! பல பல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம் பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று சொல்லுவாய்.
"தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.
எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !" என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
ஆனால் இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே ! தூக்கத்தின் தன்மை தான் என்னே ! - என்று அவள் எழுந்து வராமையால் வியப்பு மேலிடக் கேட்கின்றார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.