Maha Shivaratri Pooja: மார்ச் 1ஆம் தேதி (01.03.2022) இன்று மகாசிவராத்திரி நாளாகும். மகத்துவமிக்க இந்த நந்நாளில் எப்படி விரதமிருந்து, சிவபெருமானுக்கு பூஜை செய்வது என பார்ப்போம்.
மார்ச் 1ஆம் தேதி (01.03.2022) இன்று மகாசிவராத்திரி நாளாகும். இந்து சம்பிரதாயத்தில் சிவ பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள விழாக்களில் மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாகும்.
இந்த திருநாளன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சிவபெருமானை பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
மகாசிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து பூஜை செய்து சிவனை வழிபடுவார்கள்.
சிவபெருமான் பக்தர்களின் பக்தியால் விரைவில் மகிழ்ந்து அவர்களுக்கு விரும்பிய பலன்களைத் தருகிறார். அனைவரும் சிவபெருமானின் அருளைப் பெற விரும்புகிறார்கள். சிவலிங்கத்திற்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்வதன் மூலம் எளிதாக சிவபெருமானின் அருளை பெற முடியும். நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பூஜை முறைகள் என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்துகொள்வோம்.
பூஜை செய்யும் முறை:
சிவலிங்கம் வீட்டில் வைத்திருப்பவர்கள் சிவராத்திரி அன்று இரவு, கட்டாயம் சிவனுக்கு ஒரு கால பூஜையாவது செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து கட்டாயம் பூஜை செய்தே ஆக வேண்டும். சிவராத்திரி நான்கு கால பூஜை நேரம் என்பது இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த வருடம் மார்ச் 1ஆம் தேதி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு பிறகு, உங்கள் வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து உங்களால் முடிந்த நிவேதனத்தை வைத்து பூஜை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
இந்த நான்கு காலத்தில் குறிப்பாக இரவு 11.30 மணியிலிருந்து 1.00 மணி வரை சிவபெருமானை வழிபாடு செய்வது மிகமிக சிறப்பான காலமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் முடிந்தால் சிவராத்திரியன்று இரவு இந்த நேரத்தை மட்டும் தவறவிடாதீர்கள். இதைதான் ‘லிங்கோத்பவ காலம்’ என்று சொல்வார்கள்.
வீட்டில் லிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமானின் திருவுருவப் படம், அண்ணாமலை ஈஸ்வரின் படம் வைத்திருப்பவர்கள், இரவு உங்கள் பூஜை அறையில், அந்த திருவுருவ படத்திற்கு முன்பாக அமர்ந்து அந்த திருவுருவப்படத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, உங்களுக்குத் தெரிந்த தேவாரம் திருவாசகம் சிவபெருமானின் மந்திரங்கள் இவற்றை உச்சரித்தோ அல்லது காதால் கேட்டோம் இரவு முழுவதும் கண் விழிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். இது அல்லாமல் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அபிஷேகத்தை பார்த்து கண் விழித்தும் இரவு பொழுதை கழிக்கலாம்.
அபிஷேகம் செய்யும் அடிப்படை பொருட்கள்:
பால், சந்தனம், விபூதி, பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், வெட்டி வேர், வில்வ இலை அபிஷேகத்திற்கு முக்கிய பொருட்கள்.கண்டிப்பாக அபிஷேகத்திற்கு வில்வ இலை பயன்படுத்துவது அவசியம்.
சிவ லிங்கத்தை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்து அபிஷேகம் செய்யவும். சிவ லிங்கம் மேல் முழுவதும் வில்வ இலையைப் போட்டு அர்ச்சித்து, நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிய படியே அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின்னர் சிவ லிங்கத்தை எடுத்து வைத்து அலங்காரம் செய்யுங்கள்.
கண் விழிக்க முடியாதவர்கள், விரதம் இருக்க முடியாதவர்கள், எந்த கவலையும் பட தேவை கிடையாது. சிவபெருமானே உள்ளன்போடு மனம் உருகி ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தாலே போதும். அதற்கு உண்டான பலன் நிச்சயம் நமக்கு கிடைக்கும். அந்த சிவ பெருமானின் அருளாசி உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்!