வெயில் கால பித்த நோய்களை விரட்டும்.. எலுமிச்சை பழத்தின் மகிமைகள் தெரியுமா?

By Ma Riya  |  First Published Mar 8, 2023, 5:26 PM IST

கோடைகாலங்களில் ஏற்படும் பித்த நோய்களை தடுப்பது குறித்து இந்தப் பதிவில் முழுமையாக காணலாம். 


மக்களே இளவேனில், முதுவேனில் காலங்களில் பித்தம் கூடும் என்பதை அறிவீர்களா? இப்படி பித்தம் கூடும்போது நீர் கடுப்பு, உடல் சோர்வு, வாந்தி, குமட்டல் உணர்வு, ஒவ்வாமை, கடும் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படும். இப்படி நோய்களை வாரி கொடுக்கும் பித்தம் குறைய உடலை சமநிலையில் வைக்க வேண்டும். இதற்கு உணவில் கவனம் செலுத்த வேண்டும். 

எல்லா சத்துக்களும் கொண்ட சரிவிகித உணவை சாப்பிட வேண்டும் என்பது தான் முன்னோர் மருத்துவம். சித்த மருத்துவத்தை பொறுத்தவரை நமக்கு வரும் நோய்களுக்கு காரணமாக வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சொல்கின்றனர். இதை கட்டுக்குள் வைக்க நாம் உண்ணும் உணவில் சில சுவையை அதிகமாக்குவதும், சிலவற்றை குறைப்பதும் சமநிலையில் வைப்பதும் அவசியம். கோடைகாலத்தில் பித்தத்தைக் குறைக்க நாவில் புளிப்பு சுவைக்கும் மஞ்சள் பழமான எலுமிச்சை தான் நமக்கு உதவுகிறது. 

Latest Videos

undefined

மஞ்சள் பழத்தின் சத்துக்கள்

எலுமிச்சை என்றாலே வைட்டமின் சி சத்தை மனதில் நினைப்போம். ஆனால் அதைத் தாண்டி வைட்டமின் ஏ, பி1,பி2, பி3 ஆகியவையும், ஹிஸ்பிரிடின், குர்சிட்டின், அபிஜெனின் போன்ற பிளவனாய்டையும் தன்னுள் கொண்டுள்ளது எலுமிச்சை. உடல் இயங்க உதவும் கால்சியம், மக்னேசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களையும் எலுமிச்சை கொண்டுள்ளது. 

எலுமிச்சை பயன்கள்... 

எலுமிச்சை பழம் புற்றுநோயை தடுப்பதில் உதவுகிறது. சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளை பாதுகாக்கவும் உதவுகிறது. நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க எலுமிச்சை தான் அதிகம் உதவி புரிகிறது. கோடை கால பித்த நோய்களையும் தடுக்கிறது. கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. உடலின் நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. இந்த நன்மைகளை பெற எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

இதையும் படிங்க: சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!

பித்தம் குறைக்கும் எலுமிச்சை

•எலுமிச்சையை பிழிந்து அந்த சாறுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

• தண்ணீரில் சீரகம் போட்டு நன்கு கொதித்ததும், அதை கசாயம் போல் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை கலந்து குடிக்கலாம். இப்படி அருந்துவதால் கோடை காலங்களில் ஏற்படும் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட முடியும்

• கோடைகாலங்களில் தினம்தோறும் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து அடிக்கடி குடிக்கலாம். இதனால் சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்கும். சிறுநீரக கற்கள் நீங்கவும் உதவும்.

கவனம்.. 

வயிற்றுப்புண் உள்ளவர்கள் எலுமிச்சை எடுத்து கொள்ள வேண்டாம். இதில் உள்ள அமிலம் குடலில் எரிச்சலை உண்டாக்கலாம். மூட்டு வாதம், இடுப்பு வலி ஆகிய வாத நோய் கொண்டவர்களும் தவிர்க்கலாம். எலுமிச்சை கனியின் புளிப்பு பித்தம் குறைக்கும். இதனுடைய குளிர்ச்சித் தன்மை வாதத்தை அதிகரிக்கலாம். அதனால் கவனமாக இருங்கள். 

இதையும் படிங்க: வெயிலின் தாக்கத்தில் உடலையும் பாதுகாத்து.. எடையும் குறைக்க உதவும் அற்புத கோடைகால பானங்கள்..!

click me!