
நவராத்திரிக்கு கொலு பொம்மைகளை வைத்து அழகு படுத்துவார்கள். அதில் தெய்வங்கள், மனிதர்கள், விலங்குகள் என பொம்மைகள் பல இடம் பெறும். தேசத் தலைவர்கள் குறிப்பாக, நேதாஜியின் பச்சை நிற சீருடையுடன் தொப்பி அணிந்து கம்பீரமாக நிற்கும் பொம்மைகள் பிரபலம்தான். அரசியல் தலைவர்கள் சிலரின் பொம்மைகளும் நவராத்திரி கொலுக்களில் இடம்பெறுவதுண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொம்மையைக் கூட சென்ற வருட கொலுவில் சிலர் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சென்ற வருடம் வரை ஆட்சியில் இருந்து கொண்டும் கொலு பொம்மை மாதிரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமர்ந்திருக்கிறார் என்று விமர்சனம் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்த வருடம் கொலு பொம்மைகளாக நவராத்திரி கொலுவில் இடம் பெற இருக்கிறார். குறிப்பாக, திருச்சியில் ஜெயலலிதா பொம்மை விற்பனை சக்கை போடு போடுகிறதாம்.
நவராத்திரி விழா வரும் 20ஆம் தேதி துவங்குகிறது. இந்த விழாவையொட்டி கொலு விற்பனை பல இடங்களில் விறுவிறுப்படைந்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி என முக்கிய நகரங்களில் பொம்மைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. வழக்கமாக வருடா வருடம் கொலு பொம்மைகளை வைப்பவர்களும் கூட, ஒவ்வொரு வருடமும் புதிதாக கொலு பொம்மைகளை வாங்கி வைக்க வேண்டும் என்னும் சம்பிரதாயம் இருப்பதால், பெண்கள் பலர் ஆர்வத்துடன் புதிய கொலு பொம்மைகளை வாங்கி வருகின்றனர். இந்த வருட புதிய கொலு பொம்மைகளின் வரிசையில் பெண்களின் மனத்தைக் கவர்ந்த அரசியல் தலைவராகத் திகழ்பவர் ஜெயலலிதா. பரவலாக ஜெயலலிதா பொம்மை விற்பனைக்குக் கிடைத்தாலும், திருச்சி கொண்டையம்பேட்டையில், சின்னதுரை என்பவர் பண்ருட்டி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனைக்கு வைத்துள்ள ஜெயலலிதாவின் மார்பளவு பொம்மையை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 'இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது' எனக் கூறுகிறார் அவர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.