வீட்ல இட்லி மாவு இல்லையா..? கோதுமை மாவு வச்சு இட்லி செய்யலாம் வாங்க..ரெசிபி இதோ..!

By Kalai Selvi  |  First Published May 2, 2024, 7:30 AM IST

இந்த பதிவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை இட்லி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.


ஒவ்வொரு நாளும் காலையில் ஏதாவது சமைப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு பெரும் சவாலாக தான் இருக்கும். இதனால் தான் என்னவோ எல்லாருடைய வீடுகளிலும் பெரும்பாலும் இட்லி, தோசை தான் இருக்கும். காரணம், இது சமைப்பதற்கு மிகவும் எளிது. 

இந்நிலையில், இன்று காலை நீங்கள் ஏதாவது வித்யாசமாக செய்ய விரும்புகிறார்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லாத சமயத்தில், கோதுமை மாவை வைத்து இந்த ஸ்பெஷல் ரெசிபியை செய்யுங்கள். அது வேறு ஏதுமில்லை 'கோதுமை இட்லி' தான்.

Latest Videos

இந்த கோதுமை இட்லி செய்வது மிகவும் சுலபம் மற்றும் சாப்பிடுவதற்கு வித்தியாசமாகவும் இருக்கும். இந்த கோதுமை இட்லியை நீங்கள் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ செய்து சாப்பிடலாம். சரி வாங்க இப்போது இந்த ஸ்பெஷலான கோதுமை இட்லி எப்படி செய்வது என்று கீழே அதற்கான ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை  பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கேரட் - 1(துருவியது)
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
அதிக புளிப்பில்லாத தயிர் - 1/2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
கோதுமை இட்லி செய்ய முதலில், ஒரு தவாவை அடுப்பில் வைக்கவும். அது சூடானதும் அதில் 2 கப் கோதுமை மாவை சேர்த்து, நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வதக்கி, பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வையுங்கள். இதனை அடுத்து, அதே தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து, பிறகு அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்த, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து துருவிய கேரட்டை அதில் சேர்க்கவும். கேரட்டை அதிகம் வதக்காமல் ஒரு நிமிடம் மட்டும் வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்து, அதில் கொத்தமல்லியை தூவி பாத்திரத்தை கீழே இறக்கி அவற்றை ஆற வையுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில், வறுத்த கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலக்குங்கள். முக்கியமாக, கட்டிகள் வராமல் இருக்க கைகளால் கலக்குங்கள். பிறகு இதில் சிறிதளவு சமையல் சோடாவையும் சேர்த்து நன்கு கலக்குங்கள். இப்போ இதில் வதக்கி எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் இதனுடன் சேர்த்து நன்கு கலக்குங்கள். அவ்வளவுதான் இப்போது கோதுமை இட்லி செய்வதற்கான மாவு தயார்..

இப்போது, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விடுங்கள். பிறகு இட்லி தட்டின் குழியில் கொஞ்சமாகஎண்ணெய் தடவி, கலந்து வைத்த மாவை அதில் ஊற்றி, இட்லி சட்டியில் வைத்து, வேக வைத்து எடுத்தால், சுவையான மற்றும் சத்தான கோதுமை இட்லி ரெடி..!! இந்த கோதுமை இட்லிக்கு நீங்கள் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். கண்டிப்பாக இந்த ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணுங்கள். பிறகு உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.

click me!