Negative Thinking: எப்போதும் எதிர்மறை சிந்தனைகளுடன் போராடுகிறீர்களா? உங்களுக்காகவே இந்த குட்டி கதை...
நம்முடைய எதிர்மறை எண்ணங்களால் பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சியை தொலைத்திருப்போம். ஒரு நாளில் எத்தனையோ நன்மைகள் நடந்திருந்தாலும், ஏதோ ஒரு மனக்கசப்பான விஷயத்தை தான் அன்று முழுதும் நினைத்துக் கொண்டிருப்போம். தொடர்ச்சியான எதிர்மறை எண்ணங்கள் நம்மை முழுக்கவே எதிர்மறை மனிதராக மாற்றிவிடும். எல்லா விஷயத்திலும் நெகட்டிவான திங்கிங் (Negative thinking) சந்தேக மனநிலையை கூட ஏற்படுத்திவிடும். இந்த எதிர்மறை மனநிலையினால் வரும் தீமைகளையும், சரி செய்யும் வழிகளை இங்கு காணலாம்.
மூளையை அரிக்கும் சிந்தனைகள்!
ஒரு தீக்குச்சி தான் விளக்கிலும் ஒளியேற்றும்; காட்டையே அழிக்கும். அனுதினமும் நாம் சிந்திக்கும் எண்ணங்கள் தான் தீக்குச்சி. அதை கொண்டு ஒளியேற்றுவதா? காட்டை கொளுத்துவதா? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். கடினமான எல்லா விஷயங்களிலும் எளிமையான விஷயங்களும் இருக்கும். அதை கண்டு கொள்வதுதான் வாழ்க்கை. அப்படி கண்டு கொள்ளாமல் போகும் போதுதான் பிறர் மீது பொறாமை கொள்வது, தன்னை தானே கீழாக நினைத்து கொண்டு வருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். எல்லாவற்றையும் குற்றம் சொல்வது, ஒப்பிடுவது, தன்னிறவு கொள்ளாதது எதிர்மறை சிந்தனைகளின் விளைவுதான். இதை நீங்கள் செய்து கொண்டிருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த நெகடிவ் திங்கிங் கொண்டு வரும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பது குறித்த தெளிவு பெற இந்தக் கதையை படியுங்கள்.
கெட்ட ராஜா பசியோடிருப்பான்!
துறவியாக இருந்து ஞானம் பெற்ற ஜெய் ஷெட்டி எழுதிய 'ஒரு துறவி போல யோசி (Think like a monk)' என்ற புத்தகத்தை படித்தவர்களுக்கு இந்தக் கதை தெரிந்திருக்கும். எப்போதும் எதிர்மறை சிந்தனைகளுடன் இருப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வும், மற்றவர்கள் மீது நம்பிக்கை குறைவும் ஏற்படும். இதனால் சந்தேகத்தோடு வாழ நேரிடும். மற்றவர்களை குறை சொல்வது அதிமாகும். ஆனால் மற்றவர்களை முன்மதிப்பீடு செய்யாமல் தங்களை நேர்மறை சிந்தனைகளுடன் வைத்திருக்கும் நபர்கள் இதுபோன்ற சிக்கல்களை சந்திப்பதில்லை.
குட்டி கதை!
" ஒரு முறை கெட்ட ராஜா (எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்) நல்ல ராஜாவின் அரண்மனைக்கு விருந்துக்கு சென்றார். அந்த விருந்தில் விதவிதமான உணவு பதார்த்தங்கள் உணவு மேசையில் அடுக்கப்பட்டிருந்தன. நல்ல ராஜாவும் கெட்ட ராஜாவும் ஒரே நேரத்தில் விருந்துண்ண அமர்ந்தனர். இப்போது கெட்ட ராஜாவிற்கு இந்த சாப்பாட்டில் விஷம் கலந்திருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை இந்த ராஜா நம்மை கொன்றுவிட்டால் என்ன செய்வது என கெட்ட ராஜா பயத்தில் குழம்பினார். நல்ல ராஜா மீது பல சந்தேகங்கள் ஏற்பட்டன. பயத்தினால் நல்ல ராஜாவுடைய தட்டை தான் எடுத்துக் கொண்டு தனக்கு வைத்த தட்டை அவருக்கு கொடுத்து விட்டார்.
இதைக் கண்டு நல்ல ராஜா கேள்வி எழுப்பவே, தனக்கு வந்த சந்தேகத்தை கெட்ட ராஜா தெரிவித்தார். காரணத்தை அறிந்த நல்ல ராஜா, லேசான புன்னகையுடன் தன்னுடைய சாப்பாட்டை முழுவதுமாக உண்ட பிறகு படுக்கைக்கு சென்று விட்டார். ஆனால் கெட்ட ராஜாவோ சாப்பிடவில்லை. தன்னுடைய எதிர்மறை சிந்தனைகளால் பசியோடு படுக்கைக்கு சென்றார்; இரவெல்லாம் குழம்பி தவித்தார்" நாமும் எல்லா விஷயங்களிலும் எதிர்மறை சிந்தனைகளை மட்டுமே கொண்டிருந்தால் கெட்ட ராஜா போல நிம்மதி இல்லாமல் தான் இருக்க வேண்டும். சாத்தியமில்லாத விஷயங்களை அதிகமாக யோசிக்கக் கூடாது. முடிந்து போனவைகள் அனுபவப் பாடங்கள். அதை அசைபோடுவதை நிறுத்திவிடுங்கள்.
இதையும் படிங்க: ஆரோக்கியமாக வாழ தினமும் 'எலும்பு சூப்' சாப்பிட்டால் போதுமாம்.. ஒரு கப் சூப்பில் இவ்ளோ நன்மைகளா?
மன அழுத்தம் வேண்டாம்!
நல்ல விஷயங்களை அடையாளம் கண்டு கொள்ளும் போது கெட்ட விஷயங்களை மனம் தன்னியல்பாகவே மறந்து போகும். எல்லா கெட்ட விஷயங்களிலும் இருக்கும் நல்லதை கண்டுகொள்ள பழகுங்கள். எளிமையாக சொல்ல வேண்டுமெனில், மணிக்கணக்காக காத்திருப்பதை குறித்து வருத்தபடாதவர்கள் தான் நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு வாங்க முடியும். ஒரு சின்ன விஷயத்தை மீண்டும் மீண்டும் நினைத்து துன்பப்படுவதால் அந்த நாள் முழுக்க கோவம், எரிச்சல் போன்றவைதான் உங்களுக்கு மிஞ்சும். அதனால் அடுத்து நிகழ போகும் அற்புதங்கள் நமக்கு வாய்க்காமல் போகும். முடிந்தவரை அந்தந்த கணங்களை கொண்டாடினாலே எதிர்மறை சிந்தனைகளை வெல்லலாம்.
இதையும் படிங்க: கவலைகள் நீக்கும் 'தை' மாத முக்கிய விரதங்கள் எப்போது இருக்க வேண்டும்? என்னென்ன பலன்கள் முழுவிவரங்கள்!