Walking For Fitness : நாம் எவ்வாறு நடக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு உடல், மன ஆரோக்கியத்தை கண்டறிய முடியும்.
நடைபயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும். ஆனால் நாம் எவ்வாறு நடக்கிறோம் என்பதை வைத்து நம்முடைய ஆரோக்கியத்தை சொல்லிவிட முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவரது நடை வேகம், அவருடைய தோரணை ஆகியவற்றை கொண்டு அந்த நபரின் உடல் ஆரோக்கியத்தை கணக்கிட முடியும். எப்படி ஒருவர் நடக்கும் விதம் அவரது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நடை வேகம்:
ஒருவரது நடையின் வேகம் அவரது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக ஒரு நபர் ஒரு நிமிடத்தில் 100 காலடிகள் நடந்தால் அவருடைய உடற்தகுதி நன்றாக இருக்கிறது என அறிந்து கொள்ளமுடியும். மெதுவாக நடப்பவர்களுடைய உடற்தகுதி வேகமாக நடப்பவர்களை போல அல்ல. இவர்களுக்கு அறிவாற்றல் தொடர்பான பிரச்சனைகள், தசை பலவீனம் போன்றவை இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் நடப்பவர்களுடைய இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இதய நோய் தாக்கும் அபாயம் குறைவுதான். அது மட்டுமின்றி நுரையீரல் செயல்பாடும் இவர்களுக்கு நன்றாக இருக்கிறது. நீங்கள் நடைபயிற்சி செய்யாதவராக இருந்தால் இனிமேல் செய்ய தொடங்குங்கள். உங்களுடைய நடையின் வேகம் ஆமை போல மெதுவாக இருக்கும்பட்சத்தில் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க: தினமும் இவ்ளோ ஸ்டெப் நடந்தா போதும்! பிட்னஸ் பற்றி கவலையே இல்ல!
21 நாள் சவால்:
நீங்கள் நடைபயிற்சி செய்யாதவராக இருந்தால் உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க இந்த பழக்கத்தை வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள். முதலில் 21 நாட்கள் தினமும் நடைபயிற்சி செய்வதை பின்பற்ற தொடங்குங்கள். ஒருநாளுக்கு 30 நிமிடங்கள் என 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் நடக்க தொடங்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்யும்போது உங்களுடைய உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்கூடாக தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு நீங்களே உடற்பயிற்சி செய்ய ஆர்வமாகிவிடுவீர்கள்.
இதையும் படிங்க: இந்த '1' விஷயம் சரியா பண்ணாம 10,000 காலடிகள் நடந்தாலும் வேஸ்ட்தான் தெரியுமா?
நடக்கும் விதம் எப்படி மன ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்?
நீங்கள் எப்படி நடப்பீர்கள் என்பதை வைத்து உங்களுடைய மன ஆரோக்கியத்தை வைத்து சொல்ல முடியும். ஏற்கனவே மன ஆரோக்கியம் நன்றாக இல்லாதவர்கள் நடக்கும்போது அவர்களுடைய பதற்றம் வெளிப்படும். அவர்களுடைய தோரணை நடக்கும்போது மற்றவர்களைப் போல இருக்காது. உடலை சாய்ந்த தோரணையில் வைத்திருப்பார்கள். தோள்கள் முன்னோக்கி காணப்படும். எப்போதுமே நேரே பார்த்து நடக்காமல் தலை குனிந்து தரையைப் பார்த்து நடப்பதை தான் அதிகமாக பின்பற்றுவார்கள்.
நேரே பார்த்து நிமிர்ந்த தோரணையில் நடப்பவர்கள் தான் மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கிறார்கள். சாய்ந்த தோரணையில் தலைகுனிந்து நடப்பவர்களை விட சரியான தோரணையில் நடப்பவர்கள் அதிக சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்களுடைய மன ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டால் நீங்கள் நடக்கும் போது அதனுடைய அறிகுறிகளை உணர முடியும்.
மனசோர்வு உடையவர்கள் நடைபயிற்சி செய்யும் போது கால்கள் இழுப்பது போல உணர்வு இருக்கும். நடக்கும் தோரணை வித்தியாசமாக இருக்கும். காலடிகளும் குளறும். இப்படி இருந்தால் மன நல ஆலோசகரை அணுகவேண்டும்.
நடைபயிற்சி இளமையாக இருக்க உதவுமா?
நடைபயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதன் காரணமாக வயதான செயல்முறையை தாமதமாகி இளமையாக இருப்பீர்கள். ஃபிரண்டையர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்தில் (Frontiers in Public Health) வந்த ஆய்வுகளில், வழக்கமான நடைபயிற்சி, தீவிரமான நடைபயிற்சி ஆகிய இரண்டுமே ஒரு நபரின் ஆயுளை நீட்டிப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறைவாகும். உங்களுடைய தசைகளும் சுருக்கமடையாமல் வலுவாக இருக்க நடைபயிற்சி உதவுகிறது. மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. வயது காரணமாக ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்க நடைபயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும்.