இந்த கட்டுரையில் கோதுமை பாஸ்தா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தினமும் காலையில் உங்கள் குழந்தைகளுக்கு இட்லி தோசை தான் செய்து கொடுக்கிறீர்களா..? அவர்களுக்கு அது சாப்பிட்டு போரடித்து விட்டால், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவை காலை உணவாக செய்து கொடுங்கள். அப்படி என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லையா..? உங்களுக்கான பதிவு தான் இது.
ஆம்.. உங்க வீட்டில் கோதுமை மாவு இருக்கா..? அப்படி இருந்தால், கோதுமை மாவில் பாஸ்தா செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். இந்த கோதுமை மாவு பாஸ்தா சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமானது கூட. இந்தக் கோதுமை பாஸ்தா செய்வது ரொம்பவே ஈஸி. சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கோதுமை பாஸ்தா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் இப்படி செய்ங்க.. சுவை வேற லெவல்ல இருக்கும்!
கோதுமை பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
பூண்டு - 4
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - 1/4 கப்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி பூண்டு சட்னி கொடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்!
செய்முறை:
கோதுமை பாஸ்தா செய்ய முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு சிறிதளவு உப்பு, என்னை மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். பிறகு அதை ஒரு தட்டால் மூடி வைத்து, சுமார் 15 நிமிடம் ஊற வையுங்கள். 15 நிமிடம் கழித்து ஒரு தட்டில் கோதுமை மாவை தூவி, பிறகு பிசைந்த போது மாவை அதன் மேல் வைத்து, கத்தியால் சின்ன சின்ன துண்டுகளால் வெட்டிக் கொள்ளுங்கள்.
இதனை அடித்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் வெட்டி வைத்த கோதுமை துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வேக வையுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி குளிர்ந்த தண்ணீரில் இரண்டு முறை அலசி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். உப்புத்தூவி வதக்கினால் வெங்காயம் சீக்கிரமாக வதங்கி விடும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு, நீளமாக நறுக்கி வைத்த குடைமிளகாயை இதனுடன் சேர்த்து வதக்குங்கள்.
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு, பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மற்றும் தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்ந்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது கடைசியாக வெட்டி வைத்த கோதுமையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு பிறகு மூன்று நிமிடம் வேக வையுங்கள். இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை இதன் மேல் தூவி இறக்கினால் சுவையான கோதுமை பாஸ்தா ரெடி!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D