இந்த கட்டுரையில், உளுந்தம் பால் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்க விரும்பினால், உளுந்தம் பால் செய்து கொடுங்கள். இது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.
ஆம், இந்த பாலில் எக்கசக்க நன்மைகள் நிறைந்துள்ளது. ரொம்ப சத்தானது. ஒருமுறை செய்து இந்த பாலை கொடுங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதலில் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி குடிப்பார்கள். இந்த பால் குடிப்பதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில், உளுந்தம் பால் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உளுந்தம் பால் செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 (பெரிய கிளாஸ்)
தண்ணீர் - 5 கிளாஸ்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
சுக்குத் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 1 1/2 (துருவியது)
கருப்பட்டி பாகு - சுவைக்கேற்ப
செய்முறை:
உளுந்தம் பால் செய்ய முதலில், எடுத்து வைத்த உளுத்தம் பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வையுங்கள். உளுந்து நன்கு ஊறியதும், அதை மீண்டும் ஒருமுறை கழுவி, பின் அதை குக்கரில் போட்டு கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஏற்கனவே, தண்ணீரை சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வையுங்கள். குக்கரில் இருந்து விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து, ஓரளவுக்கு அதை ஆற வையுங்கள்.
இதனை அடுத்து, அதில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு, உளுத்தம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு, தனியாக எடுத்து வைத்த தண்ணீரை இதில் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அரைத்த உளுத்தம் பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். இதனுடன் நீங்கள் ஏற்கனவே, எடுத்து வைத்துள்ள உளுந்த தண்ணீரையும் சேர்த்து கை விடாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருங்கள்.
சிறிது நேரம் கழித்து, மாவு நுரை விட்டு நன்கு கொதிக்க ஆரம்பிக்கும். மேலும், மாவு கெட்டியாக இருப்பதை உணர்ந்தால், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, தொடர்ந்து கிளறி கொண்டே இருங்கள். அடிபிடிக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியாக சுமார், அரை மணிநேரம் அதை நன்கு கொதிக்க வையுங்கள். சிறிது நேரம் கழித்து அதிலிருந்து, நுரை அடங்கி, நீர் போன்று காணப்படும். இந்த சமயத்தில், இதில் எடுத்து வைத்த ஏலக்காய் தூள், சுக்கு தூள் இரண்டையும் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள். பிறகு, தயாரித்து வைத்த கருப்பட்டி பாகுவை உங்கள் சுவைக்கேற்ப இதில் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து, துருவிய தேங்காயையும் இதனுடன் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு
இறக்கினால், சத்தான உளுந்தம் பால் ரெடி!!!
உளுந்தம் பால் நன்மைகள்:
இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால், எலும்பு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். அதுமட்டுமின்றி, இன்றைய காலத்து பெண்கள் பலர் கர்ப்ப பை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த பிரச்சினையை தடுக்கும் ஒரு அற்புதமான மருந்து எதுவென்றால், அது இந்த உளுத்தம் பால் தான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..