Healthy Tips For Rainy Season : மழைக்காலத்தில் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.
மழைக்காலம் கொளுத்தும் வெயிலிலிருந்து நிவாரணம் நமக்கு அளிக்கிறது. ஆனால், அது நம்மை மந்தமாகவும் குறைந்த ஆற்றலுடன் இருக்க வைக்கும். வெப்பத்தின் வீழ்ச்சி ஈரப்பதத்தின் அதிகரிப்பு போன்றவற்றால் நமது ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றது. குறிப்பாக, இந்த பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியானது குறைய தொடங்குகிறது மற்றும் நோய்களின் ஆபத்தும் அதிகரிக்கும். ஆகவே, இந்த சூழ்நிலையில் உங்கள் வழக்கமான மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை செய்தால் இந்த பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சுலபமாக தவிர்க்கலாம். சில உடல் செயல்பாடுகள் நமது ஆற்றல் மட்டங்களை பராமரிக்கும் மற்றும் இந்த பருவ மழை காலம் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. அந்த வகையில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த 5 பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால், மழைக்காலம் முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருக்க முடியும்.
மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்:
1. சூடான பானத்துடன் நாளை தொடங்குங்கள்:
துளசி மற்றும் இஞ்சி டீ போன்ற சூடான பானத்துடன் உங்கள் நாளை தொடங்குங்கள். காலையில், சூடான பானத்தை குடித்தால், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் ரத்த ஓட்டம் மேம்படும். அதுமட்டுமின்றி, காலையில் இந்த பானத்தை குடித்தால் உடலில் உள்ள பலவீனம், சோர்வு நீங்கி உடலுக்கு சக்தி கிடைக்கும். மேலும் இந்த பானம் மந்தநிலையை நீக்கும். ஆய்வு ஒன்றில், இஞ்சி டீ வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கிறது. எனவே, காலையில் சூடான இஞ்சி டீ குடித்தால் மழைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றும்.
2. ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்:
மலைகளத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். உதாரணமாக, ஓட்ஸ், பழுப்பு அரிசி, முழு தானியங்கள் போன்றவை ஆகும். இவை அனைத்தும் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும் மற்றும் பலவீனம், சோர்வை நீக்கும். அதுமட்டுமின்றி, உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருந்த உணவுகளை சாப்பிடுவதால் பலவீன மற்றும் சோர்வு நீங்கும். குறிப்பாக, இரும்பு சத்து நிறைந்த கீரை மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட்டால் மழை காலத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, அடிக்கடி தண்ணீர் குடித்து உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.
3. உடற்பயிற்சி செய்யுங்கள்:
மழைக்காலத்தில் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும். மற்றும் உங்களது ஆற்றலை பராமரிக்க உடற்பயிற்சி செய்யுங்கள். இதற்கு நீங்கள் ஜிம்மிற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
4. மன அழுத்தத்தை குறையுங்கள்:
மழைக்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் சோம்பல் மற்றும் மனநிலை மாற்றங்களை தவிர்க்க முடியாதவை. எனவே, இந்த பருவத்தில் தியானம், ஆழ்ந்த மூச்சு பயிற்சி, அமைதியான இசை கேட்பது போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் விஷயங்களில் ஈடுபடுங்கள். இவை உங்கள் மனதை தெளிவுபடுத்த உதவும்.
5. நல்ல தூக்கம் அவசியம்:
நல்ல தூக்கம் பெற ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இது நமது உடலில் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்தும். இந்த பருவத்தில் உங்களது தூக்கம் முறை ஒழுங்கற்றதாக இருந்தால் உடலின் சோர்வு, பலவீனம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதற்கு நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் இரவு தூங்க செல்லுங்கள். அதேபோல காலையிலும் ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே நேரத்தில் தூங்கி எழுந்தால் உங்களது தூக்கத்தின் தரம் மேம்படும், நாள் முழுவதும் உற்சாகமாக உணருவீர்கள்.