தமிழ்நாட்டை பொறுத்த வரை தீபாவளி பண்டிகையில் பலகாரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, மற்றும் பலகாரங்கள் தான் நம் நினைவுக்கு வரும். தீபாவளி கொண்டாட்டம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றாலும், தமிழ்நாட்டை பொறுத்த வரை தீபாவளி பண்டிகையில் பலகாரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், ரிப்பன் பக்கோடா என பல வகையான பலகாரங்களை செய்து அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பலகாரங்கள் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முறுக்கு :
தேவையான பொருட்கள்
பச்சரி – 4 ஆழாக்க்கு
உளுத்தம் பருப்பு – 1 ஆழாக்கு
வெண்ணெய் – 100 கிராம்
எள்ளு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி, ஊறவைத்து, பின்னர் அதனை நிழலில் உலர்த்தி, ஈரமாக இருக்கும் போதே மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் வறுத்து அதை மெஷினில் மாவாக அரைத்து வைத்து கொள்ளவும். பின்னர் இரண்டு மாவையும் சலித்து எடுத்துக்கொள்ளவும். இப்போது இந்த முறுக்கு மாவை பாத்திரத்தில் போட்டு, உப்பு, எள்ளு சேர்ந்து வெண்னெய் சேர்த்து பிசையவும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு பிசையவும். பின்னர் அதனை முறுக்கு குழாயில் வைத்து முறுக்கு பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான உடன் பிளிந்து வைத்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தட்டை :
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – 4 ஆழாக்கு
பொட்டுக்கடலை – 1 ஆழாக்க்கு
கடலைப் பருப்பு – 100 கிராம்
தனி மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு –
செய்முறை :
புழுங்கல் அரிசியை கழுவி, நன்கு ஊறவைத்து உப்பு சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரைத்து கொள்ளவும். கடலை பருப்பை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, தேவையான உப்பு, ஊறவைத்த கடலைப்பருப்பை போட்டு நன்றாக பிசைந்து அதை சிறு உருண்டைகளாக உருட்டி அதை வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து தட்டையாக தட்டி காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக போட்டு எடுக்க வேண்டும். மொறுமொறு, சுவையான தட்டை ரெடி..
ரிப்பன் பக்கோடா :
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 1 கப்
கடலை மாவு – 1 கப்
நெய் – 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
புழுங்கலரிசியை ஒரு மணி ஊற வைத்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய் தூள், நெய் ஆகியவற்றை சேர்ந்து பிசைந்து, அதை ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மிக்சர் :
கடலை மாவு – 500 கிராம்
மிளகாய் பொடி – 50 கிராம்
பெருங்காயத்தூள் – 20 கிராம்
உப்பு- தேவையான அளவு.
பன்னீர் – 4 சொட்டு
செய்முறை
இந்த பொருட்களை ஒன்றாக சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும், பிறகு ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின்னர் அதில் தனியாக பொறித்து வைத்த அவல், வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அல்வா :
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – 1.5 கப்
நெய் – 75 கிராம்
எண்ணெய் – 2 ஸ்பூன்
பால் – ஒரு கப்
வறுத்த முந்திரி – சிறிதளவு
செய்முறை
நெய்யையும், எண்ணெயையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். மறுபுறம் கோதுமை மாவுடன், பால் சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிட வேண்டும். அது நுரையாக பொங்கி வரும் போது, கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சேர்த்து கைபடாமல் கிளறவும்.
பின்னர் நெய் – எண்ணெய் கலவையை கொஞ்சமாக விட்டு, ஒட்டாத பதம் வரை இறக்கிவிட வேண்டும். ஒரு தட்டில் நெய் தடவி, அதில் அல்வாவை சேர்த்து முந்திரி பருப்பை தூவ வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப அல்வாவை வெட்டிக்கொள்ளலாம்.
தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டம்.. செல்வ செழிப்பு அதிகரிக்குமாம்..
ஸ்வீட் பேடா :
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
பால் பவுடர் – 1 கப்
அரைத்த சர்க்கரை – ½ கப்
ஏலக்காய் பொடி
நெய் – கால் கப்
பாதாம் துருவியது – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, பால் பவுடர், அரைத்த சர்க்கரை சேர்த்து, அதுனுட நெய் கலந்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அது பால் கோவா பதத்திற்கு வரும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, உங்களுக்கு தேவையான வடிவில் செய்து கொள்ளலாம். அதன் மீது துருவிய பாதமை வைக்க வேண்டும். அவ்வளவு சுவையான ஸ்வீட் பேடா ரெடி.