தெலுங்கானாவில் இந்தாண்டிற்கான உலக அழகி போட்டி பிரமாண்ட நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ளது.
Telangana Miss World Pageant 2025 : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உலக அழகி போட்டி (Miss World 2025) வரும் மே மாதம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்குபெற உலகம் முழுவதுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஹைதராபாத் வரவிருக்கின்றனர். மே இறுதியில் (மே 31) ஹைடெக்ஸில் இறுதிப் போட்டிக்கான தொடர் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
உலகின் பல மூலைகளில் இருந்து தெலங்கானாவிற்கு படையெடுத்து வரும் போட்டியாளர்களுக்கு தெலங்கானாவின் அனைத்து பாரம்பரியங்களையும் காண்பிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு நிகழ்வுகள்:
சுமார் 140 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஹைதராபாத் வரவிருக்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் தெலங்கானா பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நாட்டுப்புற, பழங்குடியினர் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவை வரவேற்பு நிகழ்ச்சியாக மே மாதம் 10ஆம் தேதி அன்று கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: 71வது உலக அழகி போட்டி: பட்டத்தைத் தட்டிச் சென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா!
பாரம்பரிய ஸ்தல சுற்றுப்பயணம்:
மே 12, 13 ஆகிய தேதிகளில் போட்டியாளர்களுக்கு தனித்துவமான பாரம்பரிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மே 13ஆம் தேதி ஹைதராபாத் ஷார்மினாருக்கு அருகே அமைந்துள்ள சௌமஹல்லா அரண்மனையில் வரவேற்பு விருந்து நடைபெறும். யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள ராமப்பா கோயிலை உள்ளடக்கிய காகதீயா சுற்றுப்பயணம் மே 14 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே தினத்தில் வாரங்கல் கலோஜி க்ஷேத்திரத்தில் மாணவர்கள் உரையாடல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: உலக அழகி போட்டியில் சாதித்த சென்னையைச் சேர்ந்த தாய் - மகள்! அமெரிக்காவில் வரலாற்றுச் சாதனை!
சுற்றுப்பயணம்;
போச்சம்பள்ளியில் அமைந்துள்ள யாதகிரிகுட்டா கோயிலுக்கு செல்வது மே 15ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் அதே நாளில் கைத்தறி செய்யப்படும் இடத்தில் ஓர் அனுபவப் பயணம் போட்டியாளர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளது. மறுநாள் (மே 16) ஹைதராபாத் ஏஐஜி, அப்பல்லோ, யசோதா ஆகிய மருத்துவமனைகளுக்கு போட்டியாளர்களை மருத்துவச் சுற்றுப்பயணம் அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மிஸ் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் ஃபைனல் மே 17ஆம் தேதி கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் தான் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் எக்ஸ்பீரியம் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவில் கலைத்திருவிழா நிகழ்வுகளுடன் தெலங்கானா உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. தெலங்கானா காவல்துறை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மாநில செயலக வளாகம், டேங்க் பண்ட் மற்றும் அம்பேத்கர் சிலை உள்ளிட்டவைகளை மே 19ஆம் தேதியில் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வுகள்:
மே 20,21 ஆகிய தேதிகளில் போட்டியாளர்களை ஒழுங்குபடுத்த கான்டினென்டல் ஃபைனல், கான்டினென்டல் கிளஸ்டர்களின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். மே 21ஆம் தேதியன்று ஷில்பாராமத்தில் நடைபெறவுள்ள கலை மற்றும் கைவினைப் பட்டறையிலும் போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள்.
மே 22ஆம் தேதியில் ஷில்பகலா வேதிகாவில் மிஸ் வேர்ல்ட் டேலண்ட் இறுதிச்சுற்றும், மே 23ஆம் தேதி ஐஎஸ்பியில் நேருக்கு நேரான (ஹெட்- டு- ஹெட்) ஃபைனலும் நடைபெறும். மிஸ் வேர்ல்ட் டாப் மாடல், ஃபேஷன் ஃபைனல் ஆகியவை மே 24ஆம் தேதி ஹைடெக்ஸில் நடைபெறும். மே 25ஆம் தேதியில் அதே இடத்தில் நகைகள் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இறுதி விழா!
மே 26ஆம் தேதியில் பிரிட்டிஷ் ரெசிடென்சி/ தாஜ் ஃபலக்னுமாவில் விருந்து நடைபெறவுள்ளது. உலக அழகி போட்டிக்கான இறுதி விழாக்கள், நிகழ்வுகள் மே 31 ஆம் தேதி ஹைடெக்ஸில் நடைபெறவுள்ளது. உலக அழகி போட்டியின் வெற்றியாளர் அம்மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சரை ஜூன் 2ஆம் தேதி சந்திப்பார் என தகவல்கள் கூறுகின்றன.