
உலகளவில் நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் தான் எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. ஜப்பானிய மக்கள் பல சுவையான உணவுகளை விரும்பி சாப்பிட்டாலும் கூட அவர்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுவதில்லை. அவர்கள் ஸ்லிம்மாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை நம்மால் காண முடிகிறது. ஏன் அவர்கள் ஒல்லியாகவே இருக்கிறார்கள்? அவர்கள் சாப்பிட்டாலும் கூட ஏன் குண்டாவது இல்லை? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு அவர்கள் பின்பற்றும் சில முக்கிய வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் தான். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஜப்பானியர்கள் பின்பற்றும் 6 முக்கிய வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் :
1. அளவோடு சாப்பிடுதல்
Hara Hachi Bu என்ற ஒரு பழமையான தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி வருகிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், '80% வரை சாப்பிட வேண்டும்' என்பதாகும். அவர்கள் உணவு சாப்பிடும் போது பசி அடங்கியவுடன் வயிறு முழுமையாக நிரப்ப வேண்டும் என்று நினைக்காமல் சாப்பிடுவதை அப்படியே நிறுத்தி விடுவார்கள். இந்த பழக்கம் அதிகம் சாப்பிடுவது தடுக்கும் மற்றும் உடல் எடை கூடுவதையும் கட்டுப்படுத்தும். மேலும் செரிமானத்திற்கும் நல்லது.
2. ஆரோக்கியமான உணவு முறை
ஜப்பானியர்கள் சுத்திகரிக்கப்பட்ட, அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை மிகவும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு பதிலாக எப்போதுமே அவர்கள் புதிய காய்கறிகள், பழங்கள் தவிர, கடல் உணவுகள் அரிசி, புளித்த உணவுகள் (miso, natto) போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். மீனில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் நார்ச்சத்து புளித்த உணவுகளில் இருக்கும் புரோபயாடிக்குகள் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
3. சமையல் முறை
ஜப்பானியர்கள் ஆரோக்கியமான சமையல் முறையை தான் பின்பற்றுகிறார்கள். அதாவது பெரும்பாலும் அவர்கள் வேக வைத்த, லேசாக வதக்குதல், கிரில்லிங் போன்ற முறைகளை தான் பயன்படுத்துகிறார்கள். அதிக எண்ணெயில் பொறிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. ஜப்பானியர்களின் இந்த சமையல் முறையானது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். குறிப்பாக கலோரிகள் மற்றும் தேவையற்ற குறிப்புகள் சேருவது தடுக்கப்படும்.
4. அளவான உணவு பாத்திரம்
பொதுவாக ஜப்பானியர்கள் சிறிய கிண்ணம் மற்றும் தட்டுகளில் தான் உணவை பரிமாறி சாப்பிடுகிறார்கள். அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அவர்கள் சாப்பிடும் உணவின் அளவைவிட அதன் தரம் மற்றும் சுவைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களாம். ஒரே நேரத்தில் பல வகையான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் சிறிய அளவில் மட்டும் சாப்பிட விரும்புவார்களாம். இதனால் குறைவாக சாப்பிட்டாலும் முழு திருப்தி அவர்களுக்கு அளிக்கிறது.
5. சுறுசுறுப்பான வாழ்க்கை முறை
ஜப்பானியர்கள் உடல் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதாவது நடந்து செல்லுதல், சைக்கிள் ஓட்டுதல், பொது போக்குவரத்தை பயன்படுத்துதல், படிக்கட்டுகளில் ஏறுதல் என பல வழிகள் மூலம் உடல் செயல்பாடுகளை செய்வதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஜிம்மிற்கு செல்லாவிட்டாலும் அவர்களின் இந்த அன்றாட பழக்கவழக்கங்களே போதுமான உடற்பயிற்சியாக அமையும். ஜப்பானியர்களிடம் இருக்கும் இந்த பழக்கம் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
6. கிரீன் டீயின் மகிமையே மகிமை!
ஜப்பானியர்கள் தினமும் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் கேடாசின் என்னும் சேர்மங்கள் நிறைந்துள்ளதால் அவை வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் பெரிதும் உதவுகின்றது. இதனால் இதை ஆரோக்கியம் மேம்படும், புற்று நோய்களின் அபாயமும் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஜப்பானியர்கள் ஏன் சாப்பிட்டாலும் குண்டாவதில்லை என்று. இதுதான் அந்த ரகசியம். பின்பற்றும் இந்த எளிய பழக்கவழக்கங்களை நாமும் நம்முடைய தினசரி வாழ்க்கையில் இணைத்து கொண்டால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.