பெண்கள் ஒப்பனைக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பது வழக்கமானது தான். முகம் முழுக்க மேக்-அப் போட்டுக்கொள்ளவில்லை என்றாலும், நிச்சயமாக லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது பலரும் கட்டாயமாக பின்பற்றுவதாக உள்ளது. லிப்ஸ்டிக் தடவுவது உடல் நலத்திற்கு நல்லதா என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெண்கள் போட்டுக்கொள்ளும் லிப்ஸ்டிக் அவர்களுடைய மனநிலையை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடை, சூழ்நிலை, மனநிலை மற்றும் எண்ணங்களுக்கு ஏற்ப பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துகின்றனர். உதட்டில் தேய்க்கப்படும் உதட்டுச்சாயம் எந்தவொரு சூழலிலும், ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிவிடும். தோற்றத்துக்கு எடுப்பாக இருக்கும் லிப்ஸ்டிக், ஆரோக்கியத்துக்கு அவ்வளவு நல்லது கிடையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உதட்டுச்சாயத்தின் பக்க விளைவுகள் உடலுக்கு மிகவும் ஆபத்தான என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். உணவு உண்ணும் போது, உதடுகளில் இருக்கும் லிப்ஸ்டிக் நேரடியாக உடலுக்குள் சென்றுவிடுகிறது. இதனால் ரசாயன பாதிப்புகள் ஏற்பட்டு செரிமான மண்டலம் பாதிக்கப்படுகிறது. மேலும் உதடுகளுக்கும் உதட்டுச்சாயங்கள் நல்லது கிடையாது. ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் உதட்டுச்சாயம் பற்றிய சில உண்மைகளை தொடர்ந்து பார்க்கலாம்.
லிப்ஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்கள்
லிப்ஸ்டிக் வாங்கும் போது, அதுகுறித்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. குறிப்பாக அதிலிருக்கும் ரசாயனங்கள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். மாங்கனீசு, காட்மியம், குரோமியம், அலுமினியம் போன்ற வேதியியல் பொருட்களை வைத்து தான் லிப்ஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இவை உடலுக்கு தேவை தான் என்றாலும், அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் பல்வேறு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதனால் எப்போதும் உதட்டுச்சாயத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது நல்லது.
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு
உதட்டுச்சாயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான மூலப் பொருட்களில் ஒன்று ஈயம். இது உடலுக்கு மிகவும் ஆபத்தானது. ஒருவேளை லிப்ஸ்டிக் வழியாக இது உடலுக்குள் சென்றால், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இருதயம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று லிப்ஸ்டிக் இருக்கும் பராபென் என்கிற மூலப்பொருள் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மையுடன் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
தோசைக் கல்லில் விடாப்பிடியாக பிடித்து நிற்கும் துருவை விரட்டுவதற்கு எளிய டிப்ஸ்..!!
லிப்ஸ்டிக்கால் ஒவ்வாமை ஏற்படலாம்
உதட்டுச்சாயத்தில் இருக்கும் மற்றொரு மூலப்பொருள் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு. இது லிப்ஸ்டிக்கை நீண்டநேரம் எதுவுமாகாமல் வைத்திருக்க உதவுகிறது. இதிலும் புற்றுநோய் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒருசிலருக்கு உதட்டுச்சாயத்தால் ஒவ்வாமை பிரச்னை கூட ஏற்படலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுவிடுவது ஆபத்து. எனினும் சந்தையில் இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை லிப்ஸ்டிக் உண்டு. அதை வாங்கி பயன்படுத்தலாம்.
அடர்ந்த நிறங்கள் வேண்டவே வேண்டாம்
டார்க் கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் கனரக உலோகங்கள் அடர் நிறங்களில் அதிகமாக இருக்கும். உதட்டுச்சாயம் பூசுவதற்கு முன் உதடுகளில் நெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தடவவும். இது உதட்டுச்சாயத்தால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கிறது.உள்ளூர் பிராண்டுகள் மலிவாக இருக்கும். ஆனால் அவை உங்கள் உதடுகளை சேதப்படுத்தும். அதனால் நல்ல பிராண்ட் லிப்ஸ்டிக் மட்டும் வாங்கவும். மேலும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களை சரிபார்க்க மறக்காதீர்கள். உதட்டுச்சாயங்களால் ஏற்படும் நிறமிகளை நீக்க சர்க்கரை மற்றும் தேன் கொண்டு உதடுகளை ஸ்க்ரப் செய்யலாம். இது நல்ல பலனை தரும்.