1 ரூபாய் ஆஸ்பத்திரி... நெகிழ்ச்சியடைய வைக்கும் மருத்துவர்... இதுதான்யா கடவுள் மனசு..!

By Thiraviaraj RM  |  First Published Feb 15, 2021, 4:13 PM IST

நோயாளிகள் தாங்கள் இலவசமாக மருத்துவம் பெறுவதாக உணரக்கூடாது என்பதற்காகவே ஒரு ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 


ஏழைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஒடிசாவில் ரூ.1 மருத்துவமனை ஒன்றை திறந்து சிகிச்சை அளித்து வருவது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து சுமார் 330 கி.மீ.க்கு தொலைவில் உள்ளது பர்லா நகரம். இங்கு ஏழை நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த குறையை போக்குவதற்காக சங்கர் ராம்சந்தானி என்ற மருத்துவர் வாடகை வீட்டில் மருத்துவமனை ஒன்றை கடந்த 12ம் தேதி திறந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இங்கு சிகிச்சை பெறுவதற்கு ரூ.1 மட்டுமே அவர் கட்டணமாக வசூலிக்கிறார். இதனால் இது ஒரு ரூபாய் மருத்துவமனை என்றே அழைக்கப்படுகிறது. மருத்துவக்கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் சங்கர், தனது மனைவியும், பல் மருத்துவருமான சிகாவுடன் இணைந்து இந்த மனிதநேய செயலில் ஈடுபட்டு உள்ளார். காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் திறந்திருக்கும் இந்த மருத்துவமனையில் நோயாளிகள் கணிசமான எண்ணிக்கையில் வரத்தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக மருத்துவமனை திறந்த முதல்நாளே 33 பேர் வந்து ஒரு ரூபாயில் பயன்பெற்று திரும்பியுள்ளனர். இது குறித்து டாக்டர் சங்கர் கூறுகையில், ’’மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில்தான் துணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றேன். துணை பேராசிரியர்கள் பணி நேரத்தை தவிர பிற நேரங்களில் தனியாக ஆஸ்பத்திரி நடத்த முடியும். எனவே ஏழைகளுக்காக இந்த மருத்துவமனையை தொடங்கி உள்ளேன். இதன் மூலம் எனது நீண்டகால ஆசை நிறைவடைந்துள்ளது’’என்று கூறினார்.
 
நோயாளிகள் தாங்கள் இலவசமாக மருத்துவம் பெறுவதாக உணரக்கூடாது என்பதற்காகவே ஒரு ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவர் சங்கரின் இந்த சேவைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

click me!