கேஎல் ராகுலை கேப்டனாக்கியது ஏன்..? கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் விளக்கம்

By karthikeyan VFirst Published Aug 22, 2020, 3:15 PM IST
Highlights

கேஎல் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமித்தது ஏன் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் விளக்கமளித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. பார்வையாளர்கள் இல்லாத ஸ்டேடியம், கொரோனா நெறிமுறைகள் என வித்தியாசமானதாக அமையவுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய பலமுறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணிகள், மீண்டும் ஒருமுறை வெல்லும் முனைப்பில் ஜாலியாக ஆடவுள்ள நிலையில், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் மீது அதிக நெருக்கடி உள்ளது. இந்த 3 அணிகளுமே ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலேயே ஆடுகின்றன. ஆனால் அது முடியவில்லை. இந்த முறையாவது சாத்தியப்படுமா என்று பார்ப்போம். 

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப், பயிற்சியாளர் குழு, கேப்டன் ஆகியோரை மாற்றி, புது ரத்தங்களை பாய்ச்சியுள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளரும் லெஜண்ட் ஸ்பின்னருமான அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் கேப்டனான கேஎல் ராகுல் தலைமையில் பஞ்சாப் அணி களம் காணவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களிலும் பஞ்சாப் அணியை அஷ்வின் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். அஷ்வினின் கேப்டன்சியில் குறிப்பிட்டு குறையாக சொல்வதற்கென்று பெரிதாக ஒன்றும் இல்லை. அவர் சிறப்பாகவே கேப்டன்சி செய்தார். ஆனாலும் இந்த சீசனில் அவர் கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாது அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். அஷ்வினை டெல்லி கேபிடள்ஸ் அணி வாங்கியது. 

அஷ்வினை நீக்கிவிட்டு இளம் அதிரடி வீரரான கேஎல் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நியமித்துள்ளது. கேஎல் ராகுல் ஐபிஎல்லில் நீண்டகாலம் ஆடிய அனுபவமுள்ள, துடிப்பான அதிரடி வீரர். ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் ஆடியுள்ள கேஎல் ராகுலை 2018ம் ஆண்டு பஞ்சாப் அணி எடுத்தது. 2018 மற்றும் 2019 ஆகிய 2 சீசன்களில் பஞ்சாப் அணிகளில் ஆடிய கேஎல் ராகுல், பல அபாரமான இன்னிங்ஸ்களின் மூலம் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார். கெய்லுடன் இணைந்து ஓபனிங்கில் தெறிக்கவிட்டுவருகிறார். இந்நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்தது ஏன் என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு வாசிம் ஜாஃபர் அளித்த பேட்டியில், ராகுல் ஸ்திரமான, நிலையான நபர்.  ஐபிஎல்லில் நிறைய போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். அவருக்கு ஐபிஎல்லில் எப்படி ஆட வேண்டும், எப்படி அணுக வேண்டும் என்ற விஷயங்களை அறிந்தவர். கடந்த சீசனில் கூட அணியை வழிநடத்தியிருக்கிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கியமான வீரர் ராகுல்.  பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பராகவும் சிறப்பாக செயல்படக்கூடியவர் ராகுல். 

கேஎல் ராகுல் நிதானமான, தெளிவான வீரர். தோனி, விராட் கோலி ஆகிய வீரர்களுடன் ஆடியவர். எனவே அவருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துவது பெரிய சிரமமாக இருக்காது என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

click me!