நாங்க அவ்வளவு பண்ணியும் அவங்க போட்டு தாக்கிட்டாங்க!! எதிரணியை மனதார பாராட்டிய சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன்

By karthikeyan VFirst Published Mar 30, 2019, 2:09 PM IST
Highlights

சாம்சனின் அதிரடியால் ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 198 ரன்களை குவித்தது. வார்னரின் அதிரடியான தொடக்கம், மிடில் ஓவரில் விஜய் சங்கரின் அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 
 

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் சிறந்த வீரராகவும் சிறந்த கேப்டனாகவும் திகழ்கிறார் கேன் வில்லியம்சன். பெரும்பாலானோருக்கு பிடித்த கேப்டனாக வில்லியம்சன் இருக்கிறார். எதார்த்தை பேசுவதோடு, சிறப்பாக ஆடும் எதிரணி வீரர்களையும் பாராட்ட தயங்கமாட்டார் வில்லியம்சன். மீண்டுமொரு முறை எதிரணி வீரரை புகழ்ந்துள்ளார் வில்லியம்சன். 

ஐபிஎல் 12வது சீசனில் நேற்று நடந்த போட்டியில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுமே முதல் போட்டியில் தோற்றதால், இந்த போட்டியில் வெற்றி முனைப்பில் களமிறங்கின. முதல் போட்டியில் காயத்தால் ஆடாத சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியில் ஆடினார். டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் களமிறங்கினர். ஆட்டத்தை தலைகீழாக மாற்றக்கூடிய பட்லரை தொடக்கத்திலிருந்தே அடித்து ஆட விடாமல் சன்ரைசர்ஸ் பவுலர்கள் கட்டுப்படுத்தினர். ரஷீத் கானின் பவுலிங்கில் இதுவரை பட்லர் சரியாக ஆடியதில்லை என்பதால், பவர்பிளேயில் 4வது ஓவரை ரஷீத் கானை வீச வைத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன். அதற்கு பலனும் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே பட்லரை வீழ்த்திவிட்டார் ரஷீத். 

அதன்பின்னர் ரஹானேவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தது. பவர்பிளேயில் முதல் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி வெறும் 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின்னர் சாம்சனின் அதிரடியான பேட்டிங்கால் ரன் மளமளவென உயர்ந்தது. ரஹானே - சாம்சன் ஜோடி அடித்து ஆட, 12 ஓவரின் முடிவிலேயே 100 ரன்களை எட்டியது ராஜஸ்தான் அணி. பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ரஹானே 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகும் அபாரமாக ஆடிய சாம்சன், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் சதத்தை எட்டினார். 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்து அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினார் சாம்சன். சாம்சனின் இன்னிங்ஸ் அபாரமானது. 55 பந்துகளில் 102 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம்சனின் அதிரடியால் ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 198 ரன்களை குவித்தது. வார்னரின் அதிரடியான தொடக்கம், மிடில் ஓவரில் விஜய் சங்கரின் அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. 

எனினும் இக்கட்டான சூழலில் களமிறங்கி, சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன்னை மளமளவென உயர்த்தினார். அவசரப்படாமல் நிதானமாக அதேநேரத்தில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார் சாம்சன். சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ், ஐபிஎல் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. 

போட்டிக்கு பின்னர் பேசிய சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன், ரொம்ப கஷ்டமான ஒரு போட்டி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உண்மையாகவே மிகச்சிறப்பாக ஆடியது. அவர்களது இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் கட்டுப்படுத்தியும் 198 ரன்கலை குவித்துவிட்டார்கள். ஆனால் அதை நாங்கள் விரட்டியது இன்னும் சிறப்பானது. அதற்கேற்ற அடித்தளத்தை எங்கள் தொடக்க வீரர்கள் அமைத்து கொடுத்தனர் என்று தெரிவித்தார். 
 

click me!