விக்கெட் கீப்பிங்கை விமர்சித்தவர்களுக்கு ஒற்றை கேட்ச்சில் பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்!! வீடியோ

By karthikeyan VFirst Published Mar 31, 2019, 11:23 AM IST
Highlights

கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்தார். 
 

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகியவை வலுவாக உள்ளது. தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் 5ம் வரிசையும் பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் நன்றாகவே ஆடிவருகிறார். ஆனால் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டு இடங்களும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. 

மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கே வாய்ப்பு அதிகம். ஆனால் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி தொடரில் விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பினார். ஏற்கனவே அவரது விக்கெட் கீப்பிங் மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பியதை அடுத்து விமர்சனங்கள் அதிகமானது. உலக கோப்பை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கையே எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. 

ஆனாலும் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்புகளே அதிகம். எனினும் ஐபிஎல்லில் வீரர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட், ஒரு அபாரமான கேட்ச்சை பிடித்தார். 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே டெல்லியில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 185 ரன்களை குவித்தது. 186 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியும் 185 ரன்களையே எடுத்ததால் போட்டி டிரா ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி 10 ரன்கள் எடுக்க, 11 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணியை ரபாடா அபாரமாக பந்துவீசி கட்டுப்படுத்தினார். இதையடுத்து சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் இன்னிங்ஸின் போது, கிறிஸ் லின்னுக்கு ரபாடா ஒரு பவுன்ஸர் வீசினார். அந்த பந்தை பின்பக்கம் அடிக்க முயன்றார் லின். ஆனால் ஷாட் சரியாக படாமல் எட்ஜ் ஆகி சென்றது. அதை அபாரமாக ஜம்ப் செய்து ஒற்றை கையில் பிடித்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் பிடித்தது மிகவும் அபாரமான கேட்ச்; எளிதாக பிடித்துவிடக்கூடியது அல்ல. அந்த வீடியோ இதோ.. 

click me!