படிக்கல் மட்டும் அரைசதம்.. கோலி, ஏபிடி ஏமாற்றம்.. டெல்லி கேபிடள்ஸுக்கு அருமையான வெற்றி வாய்ப்பு

By karthikeyan VFirst Published Nov 2, 2020, 9:16 PM IST
Highlights

ஆர்சிபி அணியை 20 ஓவரில் 152 ரன்களுக்கு சுருட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு 153 ரன்கள் என்பது எளிய இலக்கே.
 

ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் இன்று ஆடிவருகின்றன. அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணிக்கு இளம் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் மட்டுமே ஆறுதலளித்தார். தொடக்க வீரர் ஃபிலிப் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஐந்தாவது ஓவரில் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, படிக்கல்லுடன் ஜோடி சேர்ந்தார்.

தொடக்கம் முதலே பவர்ப்ளேயை பயன்படுத்தி, அருமையான ஷாட்டுகளின் மூலம் ஸ்கோர் செய்துவந்த படிக்கல், தனது சிறந்த பேட்டிங்கை தொடர்ந்தார். கோலி தனது ஃபேவரைட் ஷாட்டான கவர் டிரைவ் மூலம் முதல் பவுண்டரி அடித்து, நன்றாக செட்டில் ஆகிவிட்ட தோற்றத்தை கொடுத்தார். ஆனால் அஷ்வின் வீசிய பந்தை தூக்கியடிக்க, எளிய கேட்ச்சை லாங் ஆனில் நின்ற நோர்க்யா கோட்டைவிட்டார்.

ஆனால் அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளாத கோலி 29  ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த சீசனில் தனது ஐந்தாவது அரைசதத்தை பதிவு செய்த படிக்கல், சரியாக 50 ரன்களுக்கு நோர்க்யா வீசிய இன்னிங்ஸின் பதினாறாவது ஓவரில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் மோரிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார்.

டிவில்லியர்ஸ் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள்  அடித்திருந்த நிலையில், கடைசி ஓவரின் 2வது பந்தில் ரன் அவுட்டானார். இதையடுத்து 20 ஓவரில் ஆர்சிபி அணி வெறும் 152 ரன்கள் மட்டுமே அடித்து, 153 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!