பேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்..! சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி

By karthikeyan VFirst Published Sep 21, 2020, 11:49 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல்லும் ஆரோன் ஃபின்ச்சும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் ஆடிய படிக்கல், அறிமுக போட்டியிலேயே அருமையாக அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே ஃபின்ச் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோலியும் 14 ரன்களில் அவுட்டாக, டெத் ஓவரில் ஒருசில பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ், அணியின் ஸ்கோர் 163ஆக உதவினார். இதையடுத்து 20 ஓவரில் 163 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 164 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

164 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான வார்னர், ஸ்டெய்ன் வீசிய 2வது பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டினார். ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்திருந்த வார்னர், 2வது ஓவரில் ரன் அவுட்டானார்.

உமேஷ் யாதவ் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ஸ்டிரைட் திசையில் அடித்த பந்தை உமேஷ் யாதவ் தடுக்க முயல, பந்து அவரது கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. ரன் ஓடுவதற்காக க்ரீஸிலிருந்து நகன்று வந்த வார்னர், உமேஷின் கையில் பட்டு பந்து ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

2வது ஓவரிலேயே வார்னரின் விக்கெட்டை இழந்தாலும், அதன்பின்னர் பேர்ஸ்டோவும் மனீஷ் பாண்டேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். 33 பந்தில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்திருந்த மனீஷ் பாண்டேவை வீழ்த்தி, பார்ட்னர்ஷிப்பை உடைத்து ஒரு பிரேக் கொடுத்தார் சாஹல். 

அரைசதம் அடித்து ஆர்சிபிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்த ஜானி பேர்ஸ்டோவை 16வது ஓவரில் 61 ரன்களில் வீழ்த்தினார் கிளீன் போல்டாக்கி அனுப்பிய சாஹல், அதற்கடுத்த பந்திலேயே விஜய் சங்கரையும் கிளீன் போல்டாக்கினார்.

பேர்ஸ்டோ ஆட்டமிழந்த பின்னர், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் அடுத்தடுத்து மளமளவென சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் பந்துவீசும்போது காலில் காயமடைந்து சென்ற மிட்செல் மார்ஷ், கடைசியில் களத்திற்கு வந்தார். ஆனால் வலியை பொறுத்துக்கொண்டு அவரால் பெரிய ஷாட்டை ஆடமுடியவில்லை. காலில் காயம் என்பதால், பேலன்ஸ் செய்து ஆடமுடியாமல் தவித்த மார்ஷ், அப்படியும் ஒரு ஷாட் ஆடமுயன்று, ஆனால் அது கேட்ச்சாகி வெளியேறினார். சந்தீப் ஷர்மா கடைசி ஓவரில் அவுட்டாக, சன்ரைசர்ஸ் அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை சாஹல் வென்றார்.
 

click me!