#SRHvsMI இது எங்களுக்கு பயிற்சி போட்டி மாதிரி.. தாறுமாறு மாற்றங்களுடன் மும்பை இந்தியன்ஸ்

By karthikeyan VFirst Published Nov 3, 2020, 12:39 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக களமிறங்கும் உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணியை பார்ப்போம்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டன.

கேகேஆர் அணி 14 போட்டிகளில் ஆடிவிட்ட நிலையில், 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. 13 போட்டிகளில் ஆடி +0.555 என்ற நெட் ரன்ரேட்டுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடைசி போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்குத்தான் முக்கியமான போட்டி. சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்கு செல்வதை தீர்மானிக்கும் போட்டி என்பதால் அதற்குத்தான் இது நெருக்கடியான போட்டி. முதலிடத்தை உறுதி செய்துவிட்ட மும்பை இந்தியன்ஸுக்கு இது பயிற்சி போட்டி மாதிரிதான்.

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இல்லாமலேயே எதிரணிகளை அசால்ட்டாக அடித்து துவம்சம் செய்துவருகிறது மும்பை அணி. சூர்யகுமார், இஷான் கிஷன், டி காக், பொல்லார்டு, பும்ரா, போல்ட், பாட்டின்சன் என ஒரு அணியாக மும்பை அசத்தலாக ஆடிவருகிறது.

இந்த போட்டி மும்பை இந்தியன்ஸுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் வெற்றி பெறும் முனைப்பில் தான் மும்பை ஆடுகிறது. ஆனால், அதேவேளையில், இந்த சீசனில் இதுவரை ஆடிராத ஒருசில வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் டி காக்கிற்கு பதிலாக கிறிஸ் லின்னும், போல்ட்டுக்கு பதிலாக மிட்செல் மெக்லனக்னும் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டி காக் மற்றும் போல்ட்டுக்கு ஓய்வு கொடுத்த மாதிரியும் ஆகும்; ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளித்த மாதிரியும் ஆகும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு தவால் குல்கர்னி சேர்க்கப்படலாம்.

கடந்த போட்டியில் ஆடாத ஹர்திக் பாண்டியா இன்று ஆடுவார். அதனால் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய ஜெயந்த் யாதவ் இன்று நீக்கப்படுவார்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர்நைல், குல்கர்னி, மிட்செல் மெக்லனகன்.
 

click me!