மும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி..! 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்

By karthikeyan VFirst Published Sep 23, 2020, 11:56 PM IST
Highlights

கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். டி காக் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 90 ரன்களை குவித்தனர்.

ஒருமுனையில் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடி பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் ரோஹித் சர்மா தனக்கே உரிய பாணியில் சிக்ஸர்களை விளாசினார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் ரன் அவுட்டாக, அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 54 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார். சூர்யகுமார் யாதவ், 28 பந்தில் 47 ரன்கள் அடித்தார். 

ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகிய பவர் ஹிட்டர்கள் பதின்களில் தான் ஸ்கோர் செய்தனர். ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் அடித்து கேகேஆருக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய கேகேஆர் அணி, ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த சந்தர்ப்பத்திலுமே, மும்பை இந்தியன்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தவே இல்லை. சுனில் நரைன், ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக், இயன் மோர்கன், ரசல், நிதிஷ் ராணா என யாருமே பெரியளவில் அடித்து ஆடவில்லை.

அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் தான் 33 ரன்கள் அடித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் அடித்தார். அதிரடி மன்னர்களும் பெரிய எதிர்பார்ப்புக்குரியவர்களுமாக இருந்த ரசல் மற்றும் மோர்கன் ஆகிய இருவரையும் முறையே 11 மற்றும் 16 ரன்களில் பும்ரா வீழ்த்தினார். கம்மின்ஸ் கடைசி நேரத்தில் 4 சிக்ஸர்களை விளாசினார். அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடித்து, 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

click me!