ஐபிஎல் 2020: டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்

By karthikeyan VFirst Published Nov 10, 2020, 10:57 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
 

ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸை 20 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே அடித்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போல்ட் வீசிய முதல் பந்திலேயே டக் அவுட்டானார். ரஹானேவும் 2 ரன்களில் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, தவான் பதினைந்து ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 22 ரன்களுக்கே டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். இந்த சீசன் முழுவதும் சரியாக ஆடாத ரிஷப் பண்ட், முக்கியமான இறுதி போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டெத் ஓவர்களில் டெல்லி அணியின் ரன்ரேட் குறைந்தது. 

ஷ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை களத்தில் இருந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போல்ட், குல்ட்டர்நைல், பும்ரா ஆகிய மூவரும் டெத் ஓவர்களை அருமையாக வீசி ரன்னை கட்டுப்படுத்தினர். ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்தில் 65 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவரில் டெல்லி அணி 156 ரன்கள் அடித்தது.

157 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் டி காக்கும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 4 ஓவரில் 45 ரன்களை குவித்தனர். டி காக் 20 ரன்களில் அவுட்டாக, அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 

சூர்யகுமார் யாதவ் 19 ரன்களுக்கு ரன் அவுட்டாக, அரைசதம் அடித்த ரோஹித், 51 பந்தில் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொல்லார்டு 9 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும், இலக்கு எளிதானது என்பதாலும், ரோஹித் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றுவிட்டதாலும் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து மும்பை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐந்தாவது முக்றையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸிடம் தவறவிட்டு ஏமாற்றத்துடன் இந்த சீசனை முடித்தது.

click me!