ஐபிஎல் 2020: ரெய்னா இறங்கிய 3ம் வரிசையில் தோனி வேண்டாம்.. அந்த பையனை இறக்குங்க..! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Aug 31, 2020, 10:31 PM IST
Highlights

சிஎஸ்கே அணியில் ரெய்னா இறங்கிய 3ம் வரிசையில் யாரை இறக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா. சிஎஸ்கே அணியில் 2008ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ரெய்னா, அந்த அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த அணியின் செல்லப்பிள்ளையாகவே இருந்துவந்தார். இந்நிலையில், அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்த சீசனிலிருந்து ரெய்னா விலகி, இந்தியாவிற்கு திரும்பிவிட்டார். அடுத்த சீசனிலும் ரெய்னா சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவரான ரெய்னா, ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5368 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார்.

ரெய்னாவின் இழப்பு சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பு. எனவே ரெய்னா இறங்கிய 3ம் வரிசையில் யாரை இறக்கலாம் என்று பலரும் ஆலோசனை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், 3ம் வரிசையில் தோனி இறங்கலாம். இது தோனிக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு என்று கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆனால் இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னரான தமிழகத்தை சேர்ந்த லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், சாம் கரனை 3ம் வரிசையில் இறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், சாம் கரனை 3ம் வரிசையில் இறக்கலாம். அவர் அந்த வரிசையில் ஆடுவது சிஎஸ்கே அணிக்கு நல்லது. நிறைய ரன்களை சாம் கரன் அடித்து கொடுப்பார். தோனி, இது கை ஃபாஸ்ட் பவுலர்கள் மீது நீண்டகாலமாகவே ஆர்வம் காட்டிவருகிறார். சாம் கரன் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய பவுலர். சூப்பரான ஃபீல்டரும் கூட என்று சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிய சாம் கரன், சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அவரை இந்த சீசனில் ரூ.5.5 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!